2011-12-14 15:05:43

பிரித்தானிய படை வீரர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை அறியும் வாய்ப்பு


டிச.14,2011. ஆப்கானிஸ்தானில் இராணுவப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய படை வீரர்கள், Aid to the Church in Need என்ற அமைப்பின் உதவியுடன், கத்தோலிக்க விசுவாசத்தை அறியும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
பிரித்தானிய படைகளுக்கு ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றும் அருள்தந்தை டேவிட் ஸ்மித் Aid to the Church in Need என்ற அமைப்பினரிடம் கேட்டுக் கொண்டதன்படி, படை வீரர்கள் படிப்பதற்கும் செபிப்பதற்கும் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வமைப்பு அனுப்பியுள்ள புத்தகங்கள் மற்றும் செப அட்டைகள் இவற்றின் உதவியால், ஒவ்வொரு வெள்ளியன்றும் இரவு மறைகல்வி பாடங்கள், செபமாலை, மற்றும் திருநற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறுவதாக இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
இராணுவத்தில் சேரும் பல இளையோர் கத்தோலிக்கப் பள்ளிகளை விட்டு விரைவில் வெளியேறுவதால், அவர்களுக்கு அடிப்படை கத்தோலிக்க மறைகல்வி கிடைக்காமல் போகிறது என்று கூறிய அருள்தந்தை ஸ்மித், இவ்வீரர்கள் மத்தியில் கத்தோலிக்க விசுவாசத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளதென்று எடுத்துரைத்தார்.
தங்கள் நாட்டிற்காக கடினமான ஒரு பணியில் வேற்று நாட்டில் வாழ்ந்து வரும் இவ்விளையோர் கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்வதற்கு தாங்கள் பெறும் இந்த உதவிகளைப் பெரிதும் வரவேற்கின்றனர் என்று அருள்தந்தை ஸ்மித் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.