2011-12-14 15:23:44

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


டிச 14, 2011. கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட உலகமே தன்னைத் தயாரித்து வரும் இவ்வேளையில் உரோம் நகரமும் வண்ண விளக்குகளாலும் குடில் தயாரிப்புகளாலும் தன்னை அலங்கரித்து, பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காகவும், இப்புனித நகருக்கு வரும் திருப்பயணிகளுக்காகவும் காத்து நிற்கிறது. குறிப்பாக, அண்டை ஐரோப்பிய நாடுகளிலிருந்து விசுவாசிகள் திருத்தந்தையுடன் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைச் சிறப்பிக்க ஒவ்வோர் ஆண்டும் உரோம் நகருக்கு வருவதுண்டு. இத்தகைய ஒரு பின்னணியில், திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் செபம், குறிப்பாக குணப்படுத்தும் புதுமைகளின் போதான அவரின் செபம் குறித்து இன்று நோக்குவோம் என இப்புதன் மறைபோதக உரையைத் துவக்கினார்.
புனித மாற்கு நற்செய்தி கூறும், காதுகேளாதவரைக் குணப்படுத்திய புதுமையிலும், புனித யோவான் நற்செய்தியில் நாம் காணும், இலாசர் உயிர்ப்பிக்கப்பட்ட புதுமையிலும், அப்புதுமைகளை நிறைவேற்றும் முன்னர், மனிதத் துன்பங்களின் முன்னிலையில் இயேசு செபிப்பதைக் காண்கிறோம்.
இந்த இரு வேளைகளிலும் இயேசு செபித்தது, துன்பங்களோடு தன்னை ஆழமாக அடையாளம் காணும் அவரின் நிலையை மட்டுமல்ல, தந்தையோடு அவரின் தனித்துவ உறவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. காதுகேளாதவரைக் குணப்படுத்திய புதுமையில், இயேசுவின் இரக்க உணர்வானது ஒரு பெருமூச்சாக வெளிப்பட்டு, செபமாகத் தொடர்கிறது. இலாசரை உயிர்ப்பித்த புதுமையில், மரியா மற்றும் மார்த்தாவின் துன்பத்தைக் கண்டு வேதனையுறும் இயேசு, தன் நண்பனின் கல்லறை முன் கண்ணீர் விட்டு அழுகிறார். அதே சமயம், தந்தையின் விருப்பம் மற்றும் தன் பணி மற்றும் தனித்தன்மையின் ஒளியில் இலாசரின் துயர்நிறை மரணத்தை நோக்குகிறார் இயேசு. நாமும் நம்முடைய செபங்களில் இறைத்தந்தையின் விருப்பத்தில் முழு நம்பிக்கைக் கொள்ள வேண்டும், மற்றும், அனைத்தையும் அன்பின் அறிவுக்கு புலப்படாத திட்டத்தின் ஒளியில் நோக்க வேண்டும் என இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்குக் கற்பிக்கின்றது. கடவுள் நமக்குத் தரவல்ல மிகப்பெரும் கொடை அவரின் நட்பே என்பதை உணர்ந்தவர்களாக நாம் நம் ஒவ்வொரு செபத்திலும் விண்ணப்பங்களையும், புகழுரைகளையும் நன்றியையும் இணைக்க வேண்டும். அதேவேளை, நம் செப எடுத்துக்காட்டு, தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை நோக்கி நம்மைத் திறப்பதாகவும், இறைமீட்பின் பிரசன்னம் இவ்வுலகில் இருப்பதை பிறருக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதக உரையை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.