2011-12-14 15:24:00

டிச 15, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, சோ. ந. கந்தசாமி


தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்ற தமிழறிஞர் சோ. ந. கந்தசாமி, 1936ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தமிழ்நாட்டில் செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை- பொருளாதாரம் பயின்ற இவர், முனைவர் பட்ட ஆய்வையும் அங்கேயே மேற்கொண்டார்.
தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.
சோ.ந. கந்தசாமி அவர்கள் நாற்பதாண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ளார். அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் வகுப்பறையில் மட்டும் புலமை புலப்படும்படி விளங்கினார் என்று இல்லை. இவர் இயற்றிய நூல்களும் என்றும் பயன்படுத்தத் தக்கன.
இவர் இந்து நாளிதழில் முப்பத்தைந்து ஆண்டுகளாக நூல் மதிப்புரைகளை எழுதி வருகிறார். இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கலாம்.
இலக்கியமும் இலக்கிய வகையும், உலகத் தமிழிலக்கிய வரலாறு, மணிமேகலையின் காலம், பரிபாடலின் காலம், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழும் தத்துவமும், தமிழிலக்கியத்தில் பௌத்தம், தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல், இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்பவை உட்பட 33 நூல்களை எழுதியுள்ளார்.
திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவரது நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சாகித்திய அகாடமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிந்துள்ளார். இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள இவர் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.








All the contents on this site are copyrighted ©.