2011-12-14 15:25:58

ஐ.நா.வின் மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு நிதி திரட்டும் கால் பந்தாட்டப் போட்டி


டிச.14,2011. ஐ.நா.வின் மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு நிதி திரட்டும் நோக்கத்துடன், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் கால் பந்தாட்டப் போட்டி இவ்வாண்டு ஜெர்மனியின் Hamburg நகரில் இச்செவ்வாய் மாலை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர்களான பிரான்ஸ் நாட்டு Zinédine Zidane, மற்றும் பிரேசில் நாட்டு Ronaldo ஆகியோரைக் கொண்ட அணிகள் விளையாடிய இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் ஆப்ரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் பகுதியில் நிலவும் வறட்சி, பட்டினி இவைகளுக்கு நிதித் திரட்டப்பட்டது.
இது வெறும் கால் பந்தாட்ட போட்டி மட்டுமல்ல, உலகின் வறுமையை ஒழிக்கும் ஒரு போட்டி என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கால் பந்தாட்ட வீரர் Zidane கூடியிருந்த மக்களிடம் போட்டிக்கு முன்னர் கூறினார்.
இந்தப் போட்டியில் திரட்டப்பட்ட நிதி Djibouti, Ethiopia, Kenya மற்றும் Somalia, ஆகிய நாடுகளில் உணவு, குடி நீர் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
‘வறுமைக்கு எதிரான போட்டி’ என்ற பெயர் கொண்ட இந்தக் கால் பந்தாட்டப் போட்டி இதுவரை ஒன்பது முறை நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் திரட்டப்பட்ட நிதி 2010ம் ஆண்டு ஏற்பட்ட ஹெயிட்டி நிலநடுக்கம், பாகிஸ்தான் பெருவெள்ளம் ஆகிய இடர்பாடுகள் உட்பட 27 வளரும் நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.