2011-12-13 15:16:32

2012ம் ஆண்டில் மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம்


டிச.13,2011. கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்கென அடுத்த ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்னர் தான் மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இத்திங்கள் மாலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் இதனை அறிவித்தார் திருத்தந்தை.
இத்தகைய உறுதியான ஆவலோடும், இறைபராமரிப்பின் உதவியோடும் இத்திருப்பயணத்தைத் தான் மேற்கொள்ளவிருப்பதாக உரைத்த அவர், இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியன் நாடுகளிலும் நற்செய்தியை அறிவிப்பதற்கு இது விலைமதிப்பில்லாத நேரம் என்று கூறினார்.
புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் விடுத்த அழைப்பையும் தனது மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்தகைய முயற்சிகள், அப்பகுதி மக்களில் இறையொளி தொடர்ந்து சுடர்விடும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
2012ம் ஆண்டு மார்ச் 21 முதல் 23 வரை கியுபாவிலும், 24, 25 தேதிகளில் மெக்சிகோவிலும் திருத்தந்தையின் இத்திருப்பயணம் இடம்பெறும் என்று வத்திக்கான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பாதுகாவலியான குவாதாலூப்பே அன்னை மரியா விழாவான டிசம்பர் 12ம் தேதியன்று பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் அந்நாடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகளையும் வைத்திருந்தனர்.
மெக்சிகோவின் குவாதாலூப்பேயில் 1531ம் ஆண்டு புனித ஹூவான் தியோகோவிற்கு அன்னை மரியா காட்சி கொடுத்ததையும் 1810ம் ஆண்டுக்கும் 1825ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க நாடுகள் இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்ததையும் சிறப்பிக்கும் விதமாக திருத்தந்தை இத்திருப்பலியை நிகழ்த்தினார்.







All the contents on this site are copyrighted ©.