2011-12-12 15:00:51

வாரம் ஓர் அலசல் - நல்லதை நினைத்தேப் போராடு


டிச.12,2011. அந்தக் கிராமத்து ஆற்றங்கரைக்குச் சிறுவன் ஒருவன் விளையாடப் போனான். அப்போது, “என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாற்று” என்று ஓர் அலறல் கேட்டது. அங்கு ஆற்றுத் தண்ணீரில் வலைக்குள் சிக்கியிருந்த முதலை ஒன்று சிறுவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கதறியது. “உன்னை நான் விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய்” என்று சிறுவன் அந்த முதலையைக் காப்பாற்ற மறுக்க, முதலையோ, “நான் உன்னைச் சாப்பிடவே மாட்டேன், இது சத்தியம்” என்று கண்ணீரோடு சொன்னது. முதலையின் சத்திய வாக்கை நம்பிச் சிறுவனும் முதலை சிக்கியிருந்த வலையை அறுக்க ஆரம்பித்தான். வலையிலிருந்து தலை வெளிப்பட்ட உடனேயே முதலை சிறுவனைக் கவ்விக் கொண்டது. அப்போது சிறுவன், “பாவி முதலையே, இது நியாயமா? என்று கண்ணீருடன் கேட்க, “இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிக் கொண்டே சிறுவனை விழுங்கத் தொடங்கியது. முதலையின் இந்த நன்றி கெட்ட செயலை கிரகிக்க முடியாத சிறுவன், அருகிலிருந்த பறவைகளிடம் நியாயம் கேட்டான். அந்தப் பறவைகளோ, “நாங்கள் எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம், ஆனால் அதைப் பாம்புகள் வந்து குடித்து விடுகின்றன, அதனால்தான் சொல்கிறோம், முதலை செய்வது சரிதான்” என்று. பின்னர் ஆற்றங்கரையில் மேய்ந்து கொண்டிருந்த கழுதையிடமும் நியாயம் கேட்டான் சிறுவன். அதுவும் முதலையின் செயலை நியாயப்படுத்தியது. “நான் இளமையாய் இருந்த காலத்தில் என் எஜமான் சக்கையாய் வேலை வாங்கிவிட்டு, தள்ளாத இந்த வயதில் என்னைத் துரத்தி விட்டான். எனவே இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்றது கழுதை. சிறுவனுக்கு மனது ஆறவில்லை. கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்டான். அந்த முயலோ, முதலையின் சித்தாந்தத்திற்கு மறுப்புச் சொன்னது. கோபமடைந்த முதலை வாதாடத் தொடங்கியது. “நீ சிறுவனைக் கவ்விக் கொண்டே பேசுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்றது முயல். அதற்கு முதலை சிரித்துக் கொண்டே, “நான் என்ன அவ்வளவு முட்டாளா?, நான் சிறுவனை விட்டால் அவன் தப்பித்து விடுவான்” என்றது. அதற்கு முயல், “அறிவுகெட்ட முதலையே, உனது வாலின் பலத்தில் நம்பிக்கையில்லையா?” என்று கேட்டது. உடனே முதலை சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் தொடங்க, முயலோ சிறுவனைப் பார்த்து, “நிற்காதே ஓடிவிடு” என்று கத்தியது. சிறுவன் ஓட ஆரம்பித்தான். சிறுவனை வீழ்த்தத் தனது வாலைத் தூக்கியது முதலை. சிறுவன் தனது வால்பகுதியை வலையிலிருந்து விடுவிப்பதற்குள் அவனை விழுங்கத் தொடங்கியது அப்போதுதான் அதற்குப் புரிந்தது. அப்போது முயல், முதலையிடம், “இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை, புரிகிறதா” என்று நக்கலாகச் சொன்னது. மனித வாழ்க்கையைப் பற்றிப் புத்த மதத்தினர் சொல்லும் அழகான கதை இது.
இந்த மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு போராடுகிறோம் என்று சொல்லத் தேவையில்லை. பிறப்பு முதல் இறப்புவரை நாம் போராட வேண்டியிருக்கின்றது. ஏன், நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே. இப்புவியில் தனிமனிதனும் போராடுகிறான். சமூகங்களும் போராடுகின்றன. நாடுகளும் போராடுகின்றன. அண்மைக்காலமாக ஐரோப்பிய சமுதாய அவை நாடுகள் தங்களது நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கப் போராடி வருகின்றன. கடந்த வாரத்தில் இதற்கு ஒரு தீர்வையும் கண்டுள்ளன. இலங்கையில் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த வார இறுதியில் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இனப்பிரச்சினைக்குச் சரியான அரசியல் தீர்வைக் காண அரசு முன்வர வேண்டும் என அப்போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் முல்லை-பெரியாறு அணை தொடர்பாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பதட்டநிலை நிலவுகிறது. தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை எழுப்பியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பீதி பரப்பப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியும், அணையில் தேக்கப்படும் நீரில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இந்தப் பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் போராடி வருகின்றன. கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பான போராட்டங்களும் தொடர்கின்றன. லோக்பால் ஊழல் ஒழிப்பு மசோதா தொடர்பாக போராட்டங்களை மேற்கொண்ட அன்னா ஹசாரே, புதுடெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் இஞ்ஞாயிறன்று ஒரு-நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். அன்னா ஹசாரே நடத்திவரும் ஊழல் எதிர்ப்புப் போராட்டம், 2011ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் முதல் 10 இடத்தில் அங்கம் வகிப்பதாக “டைம்” பத்திரிகை தெரிவித்துள்ளது.
உலகம் எதிர்கொண்டு வரும் வெப்பநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளைக் குறைப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் தென்னாப்ரிக்காவின் டர்பனில் கடந்த வாரத்தில் பன்னாட்டு மாநாட்டை நடத்தியது. 194 நாடுகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கொண்டுவரப்பட்ட உடன்பாட்டை ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வரவேற்றுப் பேசியிருக்கிறார். ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு இறுதிநாள் இழுபறியாக இருந்தாலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாடு பற்றிக் கருத்து வெளியிட்ட இந்த மாநாட்டின் தலைவர், "நாளைய தினத்தை காப்பற்றியிருக்கிறது இன்றைய தினம்" என்று கூறியுள்ளார். காடுகள் அழிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளை ஏழை நாடுகள் சமாளிக்க உதவுவதற்கென வழங்கப்படுகின்ற நிதியுதவி கைமாறுவதிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 11, இஞ்ஞாயிறன்று அனைத்துலக மலைகள் தினமும் கடைபிடிக்கப்பட்டது. “மலைகளும் காடுகளும்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட்ட இந்நாளில், மலைகளிலுள்ள காடுகள், உலகின் சுற்றுச்சூழல் நலவாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் என்பது வலியுறுத்தப்பட்டது. உலகின் பாதிக்கு மேற்பட்ட மக்களுக்குச் சுத்தமான தண்ணீரை விநியோகம் செய்யும் நீர் வளங்களை இம்மலைக்காடுகள் பாதுகாக்கின்றன. அத்துடன் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாகவும், எண்ணற்ற வனவிலங்குகளின் இல்லிடமாகவும் இருக்கின்றன. ஆனால் இக்காலத்தில் இம்மலைக்காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே இக்காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் விழிப்புணர்வு இவ்வுலக நாளில் அதிகமாகக் கொடுக்கப்பட்டது. இந்தக் காடுகளைப் பாதுகாப்பதற்கு, காட்டுவாசிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் போராட வேண்டியிருக்கின்றது. இவ்வுலக தினம் குறித்துச் சொல்கிறார் FAO காடுகள் உதவி இயக்குனர் எத்வார்தோ
RealAudioMP3
ஆம், அன்பு நேயர்களே, “போராட்டம் இல்லாத வாழ்வு உப்பில்லாத உணவு போன்றது” என்று சொன்னார் ஒரு புனிதர். வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் போராட வேண்டியிருக்கிறது. உண்மைக்காக, நீதிக்காக, நேர்மைக்காக, உரிமைக்காக, உணவுக்காக, மண்ணுக்காக என்று அனைத்திற்கும் நாம் போராட வேண்டியுள்ளது. கொள்கைகளை நிலைநிறுத்திக்கொள்ளப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அதற்கான பலன்கள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் போராடித்தான் ஆக வேண்டியிருக்கின்றது. அதைத்தான் இப்போது உலகில் நடைபெற்று வரும் போராட்டங்கள் காட்டுகின்றன. அண்மையில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு ஒருவனிடம் 16 ஆண்டுகளாகப் பாலியல் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட பெண்ணிடம், "எப்படி இவ்வளவு கொடுமைகளையும் சகித்து கொண்டீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண், "எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்புதான் காரணம். இதனால் அவ்வப்போது நான் இருக்கும் கொடுமையான சூழ்நிலையை மறந்து விடுவேன்" என்று கூறினார். இத்தனைக்கும் அப்பெண்ணுக்குச் சரியான உணவு கிடையாது. 14 வயதிலேயே தனது பிரசவத்தைத் தானே பார்த்துக்கொண்ட கொடுமை வேறு. ஆயினும் உயிர்வாழ வேண்டுமென்ற நிலைதான் அவரை அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொள்ளச் செய்தது. ஏறக்குறைய எல்லாருக்கும் இதேநிலைதான். இந்தப் போராட்டங்களில் நாம் அனுபவிக்கும் கொடுமைகள் காலத்தால் நிற்பதில்லை. அவை ஆண்டவன் கொடுத்த மறதி என்ற வரத்தால் மறைந்து விடுகின்றன. எனவே அன்பர்களே நல்லதை நினைத்தே எப்பொழுதும் போராடுவோம்!
“ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை”. “வேர்கள் தங்களது உழைப்பைப் பறை சாற்றுவதில்லை”. “எரிகின்ற தீபங்கள் யாரையும் பழிப்பதுமில்லை”. - இவை நன்றாக வாழ்ந்தவர்களின் அனுபவச் சிதறல்கள். எனவே அன்பு நேயர்களே, பெரியோர் சொல்வது போல, மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் செய்து பாருங்கள், அந்த ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு "கடவுள் இருக்கிறார்" எனத் தோன்றும். இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் சொன்னார் : “உண்மையான மகிழ்ச்சி, கேளிக்கைகளில் இல்லை, ஒருவர் தனது வாழ்க்கையின் அர்ப்பணங்கள் மற்றும் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செல்வதில் அல்ல, ஆனால் கடவுளோடு கொள்ளும் உறவில் இருக்கின்றது” என்று.
RealAudioMP3
எனவே 2011ம் ஆண்டு நிறைவுரும் கட்டத்தில் வாழும் நாம் நம் வாழ்க்கைப் பயணத்தில் கடவுள் துணைகொண்டு வாழ்க்கைப் போராட்டங்களை மேற்கொள்வோம். என்றும் நல்லவைகளை நினைத்தே வாழ்வோம்.







All the contents on this site are copyrighted ©.