2011-12-12 15:01:35

கொல்கத்தாவில் நிகழ்ந்த தீவிபத்தால் கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்கள் இரத்து


டிச.12,2011. இத்திங்கள் முதல் ஒரு வாரம் கொண்டாடப்படுவதாய் அறிவிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை கல்கத்தா உயர்மறை மாவட்டம் இரத்து செய்துள்ளது.
டிசம்பர் 9, கடந்த வெள்ளியன்று கொல்கத்தாவின் மருத்துவ மனையொன்றில் நிகழ்ந்த தீவிபத்தில் 90க்கும் அதிகமானோர் இறந்துள்ளதையொட்டி, இந்த விழாக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று கல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அருள்தந்தை தோமினிக் கோமெஸ் கூறினார்.
மாநில முதலமைச்சர் மமத்தா பானர்ஜீயும் கல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசாவும் இணைந்து துவக்கவிருந்த இந்த விழா நிகழ்ச்சிகளை தீவிபத்தில் இறந்தவர்களின் நினைவாக இரத்து செய்து விட்டோம் என்று அருள்தந்தை கோமெஸ் கூறினார்.
இத்திங்களன்று ஒரு பெரும் கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகள் ஏற்றப்படுவதாய் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிக்குப் பதில், அனைத்து மதங்களும் இணைந்து செப வழிபாடு ஒன்றை மேற்கொண்டனர் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
மேலும், இஞ்ஞாயிறன்று அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் நடைபெற்ற திருப்பலியில் இறந்தொருக்கென வேண்டுதல்கள் எழுப்பப்பட்டன என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.