2011-12-12 15:00:37

அனைத்து மதங்களிடையே ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் மியான்மார் எதிர்க்கட்சி தலைவர்


டிச.12,2011. சகிப்புத்தன்மைகளையும் ஐக்கியத்தையும் வளர்ப்பதில் மதங்களின் பங்கு மிக முக்கியமானது என்றார் மியான்மாரின் எதிர்க்கட்சி தலைவர் Aung San Suu Kyi.
மியான்மார் ஆயர் பேரவைக் கட்டிடத்தில் 15 கத்தோலிக்க ஆயர்கள், இரு குருக்கள் மற்றும் நான்கு புராட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ சபைக் குருக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடிய Suu Kyi, அனைத்து மக்களும் தங்கள் சரிநிகர் உரிமைகளைப் பெற வேண்டுமெனில், முதலில் அனைத்து மதங்களிடையே ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றார்.
கல்வி சீர்திருத்தம், ஏழ்மை அகற்றல், மதவிடுதலை போன்றவைகளின் அவசியத் தேவை குறித்தும் தன் ஆதரவுக் கருத்துக்களை வழங்கினார் அவர்.
அந்நாட்டின் யாங்கூன் புனித மேரி பேராலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாகச் சென்றிருந்த கர்தினால் ரெனாத்தோ மர்த்தினோவை கடந்த வெள்ளியன்று Suu Kyi சந்தித்ததைத் தொடர்ந்து, மியான்மார் கிறிஸ்தவத் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரின் இச்சந்திப்பு இடம்பெற்றது.








All the contents on this site are copyrighted ©.