2011-12-10 14:54:27

மோசமான வாழ்வியல் முறைகளால் ஆண்டுக்கு ஒரு இலட்சம் புற்று நோயாளிகள் - இலண்டன் மருத்துவர்கள்


டிச.10,2011. மோசமான வாழ்வியல் முறைகளால் புற்று நோயால் ஆண்டுக்கு ஒரு இலட்சம் பேர் கட்டாயமாகப் பாதிக்கப்படும் வேளை, மதுபானம் மற்றும் புகையிலைப் பயன்பாடுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு இலண்டன் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டனில் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவதற்கு அவர்களின் வாழ்வியல் முறைகளே தவிர்க்க முடியாத காரணங்களாக இருக்கின்றன என்று RCP என்ற மருத்துவர்களின் கூட்டமைப்பு நடத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதையொட்டி வேண்டுகோள் விடுத்த RCP அமைப்பின் தலைவர் Sir Richard Thompson, இவ்விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
புகையிலைப் பயன்பாட்டு வாழ்வியல் முறையால் ஆண்டுக்கு 60,800 பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புற்று நோயால் பாதிக்கப்படுவோரில் 23 விழுக்காட்டு ஆண்கள் மற்றும் 15.6 விழுக்காட்டுப் பெண்களுக்கு அவர்களின் வாழ்வியல் முறையே காரணம் என்று அவ்வாய்வு கூறுகிறது.
எனவே வாழ்வியல் முறைகளில் சில எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் புற்று நோயைத் தடுக்க முடியும் என்று அவ்வாய்வு பரிந்துரைக்கின்றது.
புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் முதலிடத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது எனவும், நுரையீரல் புற்றுநோய் மட்டுமன்றி பித்தப் பை, சிறுநீரகம், இரப்பை உள்ளிட்ட பகுதிகளிலும் புற்றுநோய் உருவாக புகைப்பழக்கம் காரணமாக அமைந்துள்ளது எனவும் அம்மருத்துவர்கள் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.