2011-12-10 14:40:41

டிசம்பர் 11, வாழ்ந்தவர் வழியில்... அகில உலக மலை நாள் (International Moutain Day)


1838ம் ஆண்டு குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்த ஒரு நாள், அமெரிக்காவின் மாசசூசட்ஸ் மாநிலத்தில் உள்ள Mount Holyoke College என்ற கல்லூரியின் மாணவர்களுக்கு மகிழ்வைத் தந்த ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி, அருகிலிருந்த ஒரு மலைக்கு கல்லூரி ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். இவ்வாறு ஆரம்பமானது மலை நாள். இன்று இது உலகெங்கும் அகில உலக மலை நாள் (International Moutain Day) என்று கடைபிடிக்கப்படுகின்றது.
ஐ.நா.நிறுவனம் ஒவ்வோர் ஆண்டையும் ஒரு மையக் கருத்திற்கு அர்ப்பணித்து வருகிறது. 2002ம் ஆண்டை அகில உலக மலைகள் ஆண்டு என்று ஐ.நா.அறிவித்தது. இந்த ஆண்டைத் தொடர்ந்து, 2003ம் ஆண்டு முதல், அகில உலக மலை நாள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 11ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது.
ஐ.நா.நிறுவனம் இந்நாளைப் பற்றிக் கூறுகையில், 'இது ஒரு விடுமுறை நாள் அல்ல; மாறாக, மலைகளைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு கல்வி நாள்' என்று பொருள்படும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2010ம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட இந்த மலை நாளுக்கு, "மலைகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை இனத்தவர்" (“Mountain minorities and indigenous peoples.”) என்ற மையக் கருத்து வழங்கப்பட்டது. "மலைகளில் உணவு பாதுகாப்பு" (Food Security in Mountains) என்பது 2011ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கடைபிடிக்கப்படும் அகில உலக மலை நாளின் மையக் கருத்து.
மனித குலத்திற்கு உயிரளிக்கும் குடிநீர், மற்றும் உணவு வகைகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. இந்த மலைகள் நமக்குச் சொல்லித் தரக்கூடிய பாடங்கள் பல உள்ளன. டிசம்பர் 11, இஞ்ஞாயிறன்று நாம் கடைபிடிக்கும் அகில உலக மலை நாளன்று இந்தப் பாடங்களைப் பயில முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.