2011-12-09 15:14:05

மனித உரிமைகள் எல்லாருக்கும் உரியது பான் கி மூன்


டிச.09,2011. இவ்வுலகில் அடக்குமுறைகள் இன்றும் மிகுதியாக இடம் பெற்றாலும், மனித உரிமைகள் காக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு உலக அளவில் அதிகரித்து வருவது நமக்கு ஊக்கமூட்டுவதாக இருக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 10ம் தேதி இச்சனிக்கிழமை அனுசரிக்கப்படும் அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித உரிமைகள் எல்லாருக்கும் பொதுவானது, அவை எவ்விதப் பாகுபாடுமின்றி மதிக்கப்பட வேண்டும், நாம் நமது உரிமைகளையும் பிறரது உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் ஆகிய இவை போன்ற விழிப்புணர்வு ஏற்படாதவரை, இவை ஏட்டில் எழுதப்பட்ட பழைய ஏடாகவே இருக்கும் என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
1948ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தின் கூறுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நீதி, மனித மாண்பு, சமத்துவம், பங்கேற்பு ஆகியவற்றைக் கோரி உலக அளவில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பான் கி மூன், இவற்றின் பயனாகப் புதிய சனநாயக அரசுகள் உருவாக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
எனவே, மனித உரிமைகள் குறித்த விவகாரத்தில் இந்த 2011ம் ஆண்டு அசாதாரண ஆண்டாகத் தெரிகின்றவேளை, இந்த ஆண்டின் சாதனைகளில் ஊக்கம் பெறுவோம் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர்.







All the contents on this site are copyrighted ©.