2011-12-09 15:14:23

உலக அளவில் 1,200 கோடிக்கு அதிகமான மரங்களை நட்டுள்ள ஐ.நா. நடவடிக்கை, தற்போது புதிய வடிவம் எடுத்துள்ளது


டிச.09,2011. உலக அளவில் 1,200 கோடிக்கு அதிகமான மரங்களை நட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் நடவடிக்கை, தற்போது, ஜெர்மனியிலுள்ள இளையோரால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்ரிக்காவின் டர்பனில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்துள்ள வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.கருத்தரங்கில் இந்த நிகழ்வு இப்புதனன்று இடம் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பான் கி மூன், இந்த உலகில் வறுமையைக் குறைத்து அனைவருக்கும் பாதுகாப்பையும் வாய்ப்புக்களையும் அதிகரிக்க வேண்டுமெனில், மரம் நடுதல் குறித்த இத்தகைய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலக அளவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா.மேற்கொண்ட மரம் நடும் இந்தத் திட்டத்தில் 193 நாடுகள் பங்கு பெற்றன. இதில், 2004ம் ஆண்டு முதல் 280 கோடி மரங்களை நட்டு சீனா முதலிடத்திலும், 210 கோடி மரங்களை நட்டு இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்நாடுகளையடுத்து எத்தியோப்பியா, மெக்சிகோ, துருக்கி என நாடுகள் அதிகப்படியான மரங்களை நட்டுள்ளன என ஐ.நா கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.