2011-12-07 16:02:18

தன்னைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களை மன்னிக்கும் அருள்சகோதரி மீனா பார்வா


டிச.07,2011. மூன்று ஆண்டுகளுக்கு முன் தன்னைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, பெரும் துன்பங்கள் அளித்தவர்களைத் தான் மன்னித்துவிட்டதாக அருள்சகோதரி மீனா பார்வா கூறினார்.
2008ம் ஆண்டு ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின்போது, 26 வயது நிரம்பிய அருள்சகோதரி மீனா பார்வா வன்முறையாளர்களால் பல்வேறு அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியாக பாலியல் வன்முறைக்கும் ஆளானார்.
தன் சொல்லொண்ணாத் துயரங்களுக்குக் காரணமானவர்களை மன்னித்து விட்டதாக அருள்சகோதரி அளித்துள்ள முழு அறிக்கையையும் ஆசிய செய்தி நிறுவனம் இப்புதனன்று வெளியிட்டது.
தான் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் தன் இறுதி அர்ப்பணத்தை முடித்ததாகவும், அதற்கு இருமாதங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தான் இக்கொடுமைகளுக்கு ஆளானதாகவும் கூறியுள்ள அருள்சகோதரி, தனக்கு நேர்ந்தது வேறு எந்த மனிதப் பிறவிக்கும் ஏற்படக் கூடாதென்று தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
தன் துன்பங்களின் உச்சியில் கடவுளைக் குறித்த கேள்விகள் தனக்கு எழுந்ததாகவும், அவ்வேளையில் “உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.” என்று யோவான் நற்செய்தியில் குறப்பட்டுள்ள வரிகள் தனக்குப் பெரிதும் உதவியதாகவும் அருள்சகோதரி எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.