2011-12-07 15:37:47

டிச 08, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, நோயல் சாபனெல்


1613ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி பிரான்சின் தென்பகுதியில் பிறந்தார் நோயல் சாபனெல். தன் 17ம் வயதிலேயே இயேசு சபையில் இணைந்த இவர், அச்சபையின் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். நற்குணங்களில் சிறந்து விளங்கிய இவரை கானடாவின் பூர்வீகக்குடிமக்களிடையேப் பணியாற்றுமாறு 1643ம் ஆண்டு இயேசு சபை அனுப்பியது. கல்வியிலும் பக்தியிலும் சிறந்து விளங்கிய இவரால், Huron பூர்வீகக் குடியினருக்குப் பணி செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த முடியவில்லை. அவர்களின் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதும் அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்வதும் இவருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இதனால் அங்கிருந்து சென்று விடலாம் என்ற சோதனைப் பிறந்தது. ஆனால் தனக்களித்த கடமையை தானே நிறைவேற்ற வேன்டும் என்ற உறுதிப்பாட்டுடன், திருநற்கருணை முன் சென்று, தான் எச்சூழலிலும் இந்த மக்களை விட்டுச் செல்லமாட்டேன் என தனிப்பட்ட முறையில் உறுதி எடுத்துக் கொண்டார். அதைத் தன் வாழ்நாளின் கடைசி வரை காப்பாற்றினார். வெள்ளையர்கள் மீது கோபம் கொண்ட கானடாவின் Huron பூர்வீகக் குடிமக்கள், இயேசு சபையினரைத் தாக்கினர். தன்னோடு இருந்த Huron இன கத்தோலிக்கர்களை அங்கிருந்து தப்பியோடப் பணித்த குரு நோயல் சாபனெல், கிறிஸ்தவத்தின் மீது வெறுப்பு கொண்ட அதே இனத்தைச் சேர்ந்த ஒருவரால் 1649ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி கொல்லப்பட்டார். இதே பூர்வீகக் குடிமக்களுக்காகப் பணியாற்றிய போது மறைசாட்சிகளாக உயிரிழந்த மேலும் ஏழுபேருடன் இணைந்து 1930ம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டார் இயேசு சபை குரு நோயல் சாபனெல்.








All the contents on this site are copyrighted ©.