2011-12-06 15:15:50

டிசம்பர் 07, வாழ்ந்தவர் வழியில்... நோம் சோம்ஸ்கி (Noam Chomsky)


அறிவாற்றலிலும், அரசியல் துணிச்சலிலும் ஈடு இணையற்ற அறிஞராக இன்று உலகில் மதிக்கப்படுபவர் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky). இவர் 1928ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி Philadelphia நகரில் பிறந்தார். யூத இனத்தைச் சார்ந்த இவரது தாயும் தந்தையும் வெவ்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்.
நோம் சோம்ஸ்கி 10வது வயதிலேயே பாசிசக் கொள்கைக்கு எதிராக ஒரு கட்டுரையை எழுதினார். இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகள் இவரைப் பெரிதும் பாதித்தன.
மெய்யியல், மொழியியல் ஆகிய இரண்டிலும் தன் கல்லூரி படிப்பை முடித்த இவர், 1955ம் ஆண்டு தனது 27வது வயதில் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். உலகப் புகழ்பெற்ற கல்விக்கூடமான MIT எனப்படும் மாசசூசட்ஸ் பொறியியல் நிறுவனத்தில் 1955ம் ஆண்டு முதல் கடந்த 56 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.
மொழியியல், அறிதிறன் அறிவியல், கணனியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாக பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார்.
கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி 1980 முதல் 1992 வரையில், மேற்கத்திய நாடுகளில் எழுதப்பட்ட கட்டுரைகளில் அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியர் இவரே.
உலகின் பல நாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளன. அவற்றுள் லண்டன், சிகாகோ, தில்லி, கேம்பிரிட்ஜ், கொலம்பியா, ஹார்வர்டு, கொல்கத்தா, டொராண்ட்டோ ஆகிய பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தக்கவை. இவரது அறிவுத்திறனுக்காகவும், உலக அமைதிக்கென இவர் வழங்கியுள்ள உரைகளுக்காகவும் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார் நோம் சோம்ஸ்கி.
2005ம் ஆண்டு Prospect என்றழைக்கப்படும் பிரித்தானிய இதழ் வாழும் அறிஞர்களில் தலை சிறந்தவர் யார் என்பது குறித்து நிகழ்த்திய ஒரு கருத்துக் கணிப்பில் நோம் சோம்ஸ்கி முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க இதழ் New Statesman 2006ம் ஆண்டு 'நமது இன்றைய நாயகர்கள்' (“Heros of our time”)என்று நடத்திய கருத்துக் கணிப்பில் நோம் சோம்ஸ்கி ஏழாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.