2011-12-06 15:28:48

கர்தினால் மால்கம் இரஞ்சித்: குழந்தைகள் காப்பகம் மீது ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளன


டிச.06,2011. அருளாளர் அன்னை தெரேசாவின் பிறரன்புச் சகோதரிகளுள் ஒருவர் பொய்களின் அடிப்படையில் தவறான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார்.
சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை விற்றார் என்ற தவறான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டுள்ள மேரி எலிசா என்ற அருள்சகோதரியின் மீதும், அன்னை தெரசா சகோதரிகள் நடத்தி வரும் பிரேம் நிவாஸ் எனப்படும் குழந்தைகள் காப்பகம் மீதும் ஊடகங்கள் பல அவதூறான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன.
இவைகளைக் குறித்து அண்மையில் செய்தியாளர்களை அழைத்துப் பேசிய கர்தினால் மால்கம் இரஞ்சித், இச்செய்திகளைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்ட அதே வேளையில், இந்த வழக்கு குறித்து சரியான தீர்வு கிடைக்கும் வரை தான் எந்தப் பொது விழாவிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
பிரேம் நிவாஸ் குழந்தைகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் குறிப்பிட்ட தொகைகளுக்கு அந்நிய நாட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றனர் என்பதும், முக்கியமாக, அங்கு பராமரிக்கப்படும் மாற்றுத் திறனுள்ள குழந்தைகளே அந்நிய நாடுகளுக்கு அதிகம் விற்கப்படுகின்றனர் என்பதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகள் என்று கர்தினால் இரஞ்சித் வலியுறுத்திக் கூறினார்.
அருள் சகோதரி எலிசா மீதும், குழந்தைகள் காப்பகம் மீதும் கூறப்படும் அவதூறான செய்திகளால் அச்சபை சகோதரிகள் மனம் தளர்ந்து போகாமல், தொடர்ந்து அவர்களது தன்னலமற்ற சேவையைத் தொடர்வதற்கு கத்தோலிக்க மக்கள் தங்கள் செபங்களை விண்ணகம் நோக்கி எழுப்ப வேண்டும் என்றும் கர்தினால் இரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.