2011-12-05 15:18:17

வாரம் ஓர் அலசல் – இயற்கையோடு நல்லுறவு (International Year of Forests, 2011)


RealAudioMP3 டிச.05,2011. “காடுகள் அழகாக இருக்கின்றன; அவை இருண்டிருக்கின்றன; அடர்ந்திருக்கின்றன; ஆனால் நான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது; உறங்குவதற்கு முன் நெடுந்தூரம் செல்லவேண்டியிருக்கிறது”. இவை, இராபர்ட் ஃப்ராஸ்டின் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய வரிகள். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த போது அவரது தலையணைக்கு அடியில் ஒரு துண்டுத் தாள் இருந்ததாம். அதில் இந்தக் கவிதை வரிகளை அவர் கைப்பட எழுதி வைத்திருந்தாராம். உண்மைதான். மனிதனுக்கு எப்போதுமே காடுகள் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. காடுகளின் அடர்த்தி, அவற்றின் அழகு, இருட்சி, அமைதி, ஆங்காங்கே கேட்கும் தெளிந்த நீரோடைகளின் சப்தம், பறவைகளின் கீச்சு ஒலி, விலங்குகளின் பிளிறல் என காடுகள் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். எப்போதும் இரைச்சலுக்கு மத்தியில் வாழும் மனிதன் அமைதி தேடி காடுகளுக்குச் செல்கிறான். காடுகளில் தனிமையில் பல யோகிகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்தக் காடுகள்தான் ஆதிகால மனிதனுக்குத் தாய் மடியாகவும், மார்பகமாகவும் இருந்துள்ளன. இக்காலத்திலும், உலக வங்கியின் கணிப்பின்படி 160 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கைக்குக் காடுகளைச் சார்ந்துள்ளனர். இவர்களில் சுமார் முப்பது கோடிப் பேர் காடுகளிலே வாழ்கின்றனர். காட்டு உற்பத்தித் தொழில், பொருளாதார முன்னேற்றத்துக்கும் வேலை வாய்ப்புக்களுக்குமான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. உலகின் காட்டு உற்பத்திகளின் வணிகத்தின் மொத்தப் பெறுமதி 32 ஆயிரத்து 700 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார ஆதாயத்துக்காகக் காடுகள் அழிக்கப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிந்து போகின்றன. காடுகளும் காட்டு மண்ணும் நூறாயிரம் கோடிக்கு மேற்பட்ட டன் கார்பனைச் சேமித்து வைக்கின்றன. இந்த அளவில் இரண்டு மடங்கு வெளிமண்டலத்தில் உள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறுகிறது.

பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் 20 விழுக்காட்டுக்கு காடுகள் அழிக்கப்படுவதே காரணம், இப்புவி மேலும் மேலும் வெப்பமடைவதற்கு இது உதவுகின்றது. மேலும், உலகில் வாழும் உயிரினங்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டவைகள் காடுகளில் வாழ்கின்றன. வெப்பமண்டல மழைக்காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் நாளொன்றுக்கு சுமார் நூறு இனங்கள் வீதம் அழிந்து வருகின்றன என்று உலக வங்கி கூறுகிறது. உலகம் முழுவதிலும் நூறு கோடிக்கு மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அழிந்துபோன அல்லது தரம் குறைந்துபோன காடுகளை மீள்விக்க முடியும் என்று IUCN என்ற பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியமும், காட்டு நிலஅமைப்பு கூட்டாண்மையும் கூறுகின்றன.

இந்தப் புள்ளி விபரங்களைப் பன்னாட்டு அமைப்புகள் அடிக்கடி வெளியிட்டு வரும் நோக்கம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். கடந்த நவம்பரில் எத்தனை நாடுகள் கனமழையினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டன! இந்தச் சேதங்களைப் பயன்படுத்திக் கொலைகளையும் கொள்ளைகளையும் சிலர் நடத்தினர். காடுகள் கட்டுப்பாடின்றி அழிக்கப்பட்டால், புதிதாக மரங்கள் நடப்படவில்லையெனில் வருங்காலத் தலைமுறை பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனைக் கவனத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் 2011ம் ஆண்டை, காடுகள் ஆண்டாக, வன ஆண்டாக அறிவித்துப் பலவிதமான செயல்திட்டங்களையும் செய்து வருகிறது. மரம் நடுதலை 2006ம் ஆண்டிலே துவக்கிய ஐ.நா, உலகம் முழுவதும் 300 கோடி மரங்களை நடவு செய்துள்ளது. மொத்தம் 700 கோடி மரங்களை நடவு செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்த மரங்கள் நடும் திட்டத்தில் தற்போது எத்தியோப்பியா 72.5 கோடி மரங்களை நடவு செய்து முதலிடத்திலும், துருக்கி 70 கோடி மரங்களை நடவு செய்து 2வது இடத்திலும் உள்ளன. இப்பட்டியலில் மெக்சிகோ (47,24,04,266 மரங்கள்) 3வது இடத்திலும், கென்யா (13,98,93,668 மரங்கள்) 4வது இடத்திலும், கியூபா 5வது இடத்திலும் (13,74,76,771) உள்ளன. சீவக சிந்தாமணியும், ஒருவர் எத்தனை மரங்களை நட வேண்டுமென்று சொல்கிறது. “ஓர் அரசு ஆலும் வேம்பும், ஒரு பத்துப் புளியும், மூன்று சீருடன் விளவும் வில்வமும், மூன்றுடன் சிறந்த நெல்லியும், பேர் பெறும் ஐந்து தென்னை, பெருகு, ஐந்து மா. இவற்றை யார் யார் பயிர் செய்கிறாரோ அவர்க்கில்லை நரகம் தானே” என்று சீவக சிந்தாமணி சொல்கிறது.

“காடுகளைக் கொண்டாடு, வாழ்வைக் கொண்டாடு” என்னும் சுலோகத்துடன் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்த அனைத்துலக வன ஆண்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நியுசிலாந்து நாட்டு வெல்லிங்டனில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இவ்வாண்டைத் தொடங்கி வைத்த அந்நாட்டு வனத்துறை அமைச்சர் David Carter, “இயற்கையை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப் பொருளாதாரத்திற்கு காடுகள் ஒருங்கிணைந்த அங்கம் வகிக்கின்றன, காடுகள் சுற்றுச்சூழல் நன்மைகளைத் தருகின்றன, அவை கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று கூறினார். ரொமானிய நாட்டுக் கழகம், இந்த வன ஆண்டு குறித்து தேசிய அளவில் ஒரு கலந்துரையாடலையே நடத்தியுள்ளது. தமிழகத்தின் கோவையில், பசுமையைக்கொண்டு வரும் "பசும்புலரி' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வாரத்துக்கு 2,011 மரங்கள் வீதம் 52 வாரங்களில் 1,04,572 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை நூறு விழுக்காடு வளர்ப்பதே நோக்கமாகும். இத்திட்டத்தில், ஆயிரம் மரங்களை வளர்க்க, "கிரீன் கார்டியன்', நூறு மரக்கன்றுகளை வளர்க்க, "கிரீன் வார்டன்', பத்து மரக்கன்றுகளை வளர்க்க "கிரீன் ஹேண்ட்' என்று நான்கு அடுக்குப் பசுமை இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் இதனை ஊக்குவிக்கும் முறை பற்றி இந்த அமைப்பைச் சேர்ந்தவர் விளக்கியிருக்கிறார். இந்தத் திட்டத்தின் துவக்க விழாவில் பேசிய இந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், “ஒரு லிட்டர் டீசல், 2.7 கிலோ கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது; நானும், எனது நண்பர்களும் கடந்த 2 நாள் பயணத்தில், 162 கிலோ கார்பனை உற்பத்தி செய்துள்ளோம். ஆண்டுதோறும் அண்டவெளியில் 3,600 கோடி டன் கார்பன் உருவாகி, உலக வானிலை நிலவரம் மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு மரம், ஆண்டுக்கு இருபது கிலோ கார்பனை உட்கொண்டு, 14 கிலோ பிராணவாயுவை உற்பத்தி செய்கிறது. நாட்டிலுள்ள 100 கோடி மக்களும், ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்; மொத்தத்தில் நம்மால் நூறு கோடி மரங்களை வளர்க்க முடியும்; அப்படி வளர்த்தால், நாட்டின் தட்ப வெப்ப நிலையே மாறி, உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா மாறும்” என்று உரையாற்றினார்.

இயற்கை வளங்கள் நீடித்து நிலைக்க ஒரு நாட்டின் மொத்த நிலபரப்பில் 33.3 விழுக்காடு அதாவது மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்க வேண்டும் என்று அறிவியலாளர் சொல்கிறார்கள். ஆப்ரிக்காவில் மரங்கள் வளர்ப்பு, நல்ல விளைச்சலையும், அறுவடையையும் உணவு பாதுகாப்பையும் தருவதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. மேற்கு ஆப்ரிக்க நாடான புர்க்கினா ஃபாசோவில், கிராம மக்களின் உயிர் வாழ்க்கைக்கு மரங்கள் பெறும் உதவியாக இருப்பதாக, “மர உதவி” என்ற திட்ட அலுவலகர் Andrew Dokurugu விவரிக்கிறார். பழங்கள், இலைகள், பலகை, மரப்பட்டை என மரத்தினால் கிடைக்கும் அனைத்தும் கிராமத்தினரின் வாழ்வுக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன என அவர் கூறுகிறார் மற்றுமோர் ஆப்ரிக்க நாடான கானாவில், வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டத்தின் மூலம் ஆறு இலட்சம் கிராம மக்கள் பயன் அடைந்துள்ளனர் என்று Dokurugu சொல்கிறார்.

மரங்களே அழியாச் சொத்து! புத்தர்க்கு ஞானம் பிறந்தது போதி மரத்தடியில். வர்த்தமானருக்கு ஞானம் கிடைத்தது அசோக மரத்தடியில். வங்காரி மாத்தாய்க்கு நொபெல் அமைதி விருது கிடைக்கக் காரணமாக இருந்ததும் மரங்கள்தான். கடந்த செப்டம்பர் 25ம் தேதி புற்றுநோயால் இறந்த வங்காரி மாத்தாய் 2004ம் ஆண்டு நொபெல் அமைதி விருது பெற்றார். இந்த விருதை வென்ற முதல் ஆப்ரிக்கப் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கென்யாவைச் சேர்ந்த இவர், ஆப்ரிக்க மக்கள், வறுமையின் காரணமாக, மரங்களை வெட்டிப் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அதனால் கிரீன் பெல்ட் (Green Belt) என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் மரங்களின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் ஆப்ரிக்க மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னார். “உங்களுக்குப் பணம் வேண்டுமானால் மரத்தை நடுங்கள். அவை உங்களுக்குப் பணம் தரும்.” என்றார். அவ்வாறே ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அம்மரங்கள் ஆப்ரிக்கப் பெண்களுக்குப் பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் மாறிவிட்டன. இராணா என்பவர், வட சென்னையில் தங்க சாலை தொடங்கி கும்மிடிப்புண்டி வரை இதுவரை ஏறத்தாழ 10,000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார். நேபாளத்தைத் தாயகமாக கொண்ட இராணா என்கிற தேக் பகதுர், 75 வயதை நெருங்கிய பின்னும் தொய்வில்லாமல் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக இப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். அன்பர்களே, நாமும் ஓர் ஆப்ரிக்க மாத்தாயாய், ஓர் இராணாவாக செயல்படலாமே!

ஒருமுறை இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் இருக்கின்ற De La Barr என்ற ஆய்வுக்கூடத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கே இரண்டு பாத்திகளில் விதை விதைத்தார்கள். இரண்டிலும் ஒரே மாதிரியான விதை, ஒரே மாதிரியான உரம், ஒரே விதமான பாத்தி - இப்படி இரண்டுமே எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்தன. ஆனால் ஒரு பாத்திக்கு அருகில் பாப் இசையை முழக்கினார்கள். அடுத்த பாத்திக்கு அருகில் பாரம்பரிய சாஸ்திரீய இசையை முழக்கினார்கள். நம் எல்லாருக்குமே தெரியும் பாப் இசை இன்றைய தலைமுறையில் பெரும்பாலானவர்களின் இசை. இந்த இசைதான் இன்றைய தலைமுறையைக் குத்தாட்டம் போட வைக்கிறது. ஆனால் சாஸ்திரீய இசை அப்படியல்ல. De La Barr ஆய்வுக்கூடம் நடத்திய ஆய்வின் முடிவு நமக்கு வியப்பைத் தருகிறது. பாப் இசை முழக்கப்பட்ட பாத்திகளில் விதைகள் முளைவிடவே இல்லை. அப்படித் தப்பித் தவறி முளைவிட்டதெல்லாம் பலமாக இல்லை. பாதி காய்ந்த நிலையிலே இருந்தன. ஆனால் சாஸ்திரீய இசை இசைக்கப்பட்ட பாத்திகளிலிருந்த விதைகள் சாதாரணமாக மலருவதைவிட ஒன்றரை மடங்கு பெரிதாகவும் அதிக எண்ணிக்கையிலும் துளிர்கள் விட்டிருந்தன.

இந்த வேறுபாடு பற்றி ஒரு பெரியவர் சொல்லும் போது, “இசையிலிருந்து ஒலி அலை எழும்ப முடியுமானால் மனிதர்களின் செயல்களிலிருந்து அலைகள் எழும்பாதா என்ன?” என்று கேட்கிறார். ஒரு மெய்யியலாளரும் சொன்னார்: “அகங்காரமுள்ள மனிதன் கொடூரமான அலைகளை எழுப்புகிறான். அகங்காரமற்ற மனிதன் தன்னைச் சுற்றி சாஸ்திரீய இசையை பரப்புகிறான்” என்று. ஆகவே அன்பு நெஞ்சங்களே, நாம் நல்ல எண்ண அலைகளைப் பரப்பினால் நம்மைச் சுற்றி எல்லாமே நல்லதாக நடக்கும். இந்த வன ஆண்டில் நமக்குத் தேவையானது இயற்கையை அழிக்காது அதனை அன்பு செய்யும் ஒரு வாழ்க்கை. இயற்கையோடு நல்லிணக்கம் கொள்ளும் வாழ்க்கை. அப்போதுதான் இந்த உலகம் பசுமையாக இருக்கும். நாம் எல்லாரும் நோய் நோக்காடின்றி பஞ்சம் பட்டினியின்றி நிம்மதியாய் வாழ முடியும்.








All the contents on this site are copyrighted ©.