2011-12-05 14:48:24

டில்லி உயர் மறைமாவட்டப் பேராயரின் குருத்துவப் பொன் விழா


டிச.05,2011. வெகு வேகமாக விரைந்துள்ள இந்த ஐம்பது ஆண்டுகளிலும் இறைவனின் பராமரிப்பை நான் உணர்ந்துள்ளேன் என்று டில்லி உயர் மறைமாவட்டப் பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ கூறினார்.
1961ம் ஆண்டு டிசம்பர் 4ம்தேதி திருநிலைப்படுத்தப்பட்ட பேராயர் கொன்செஸ்ஸாவோ மற்றும் டில்லி உயர் மறைமாவட்டக் குருக்கள் நால்வர், ஐம்பது ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளதை அம்மறை மாவட்டம் இஞ்ஞாயிறன்று கொண்டாடியது.
ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகளும், நூற்றுக்கணக்கான குருக்களும் துறவியரும் கலந்து கொண்ட இந்த விழாத் திருப்பலியின் துவக்கத்தில், பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோவுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
பேராயர் கொன்செஸ்ஸாவோவின் தலைமைப் பணி டில்லி உயர் மறைமாவட்டத்தில் வரலாறு படைத்துள்ளது என்று ஜலந்தர் ஆயர் அனில் கூட்டோ தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
திருப்பலியைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய அரசின் வேளாண்துறை துணை அமைச்சர் கே.வி. தாமஸ் பேராயரை வாழ்த்திப் பேசினார்.
பேராயரும் நான்கு குருக்களும் கொண்டாடிய இந்தப் பொன் விழாவில், திருமணத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 8 தம்பதியருக்கு பேராயர் பாராட்டுக்களை வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.