2011-12-05 14:49:07

டிசம்பர் 5 அகில உலக தன்னார்வப் பணியாளர் நாள்


டிச.05,2011. மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்கென தன்னார்வப் பணியாளர்கள் ஆற்றிவரும் சேவைகள், போராட்டம் சூழ்ந்துள்ள இவ்வுலகில் வாழ்வை மாற்றும் சக்தி கொண்டவை என்று ஐ.நா.வின் தன்னார்வப் பணியாளர் அமைப்பு கூறியது.
டிசம்பர் 5 இத்திங்களன்று அகில உலக தன்னார்வப் பணியாளர் நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, ஐ.நா. அமைப்பின் செய்தியை வெளியிட்ட இவ்வமைப்பின் இணை இயக்குனர் Naheed Haque, உலகச் சமுதாயம் இப்பணியாளர்களின் தன்னலமற்றச் சேவையைத் தகுந்த வகையில் அங்கீகரிப்பது அவசியம் என்று கூறினார்.
உலகின் பல நாடுகளில், முக்கியமாக, போர்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும் துன்புறும் மக்களிடையே தன்னார்வப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொகுத்து ஐ.நா.அமைப்பு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு பல நாடுகளில் பணி புரிந்து வரும் தன்னார்வத் தொண்டர்கள் 8000 பேர் என்றும், பட்டினியைப் போக்குதல், HIV மற்றும் AIDS நோயுற்றவர்களுக்கு உதவுதல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை கூறுகிறது.
இத்திங்களன்று கொண்டாடப்படும் இந்நாளையொட்டி, 'உலகை ஒளிமயமாக்குவோம்' என்ற கருத்துடன் இணையதளத்தில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அவற்றில் தன்னார்வத் தொண்டர்கள் பணி செய்யும் இடங்களில் பதிவுசெய்த புகைப்படங்களில் சிறந்தப் புகைப்படம் எது என்று தீர்மானிக்கும் போட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது என்றும் ஐ.நா.வின் செய்தி குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.