2011-12-03 15:29:49

'தலித் விடுதலை ஞாயிறு' இம்மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது


டிச.03,2011. தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கும் கொள்கைகளால் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கான அர்ப்பணத்தைப் புதுப்பிக்கும் நாளான 'தலித் விடுதலை ஞாயிறு' இம்மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
'வாழ்வோடு போராடும் மக்களோடு நம் இறைவன்' என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்ப்டும் இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் அவைத்தலைவர் ஆயர் நீதிநாதன், கிறிஸ்தவச் சமூகங்களிலும் சாதி மனப்பான்மை தன் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது குறித்த கவலையை வெளியிட்டுள்ளார்.
மேலும், மனிதனுக்குரிய மாண்பையும் அவன் உரிமைகளையும் மதிக்கத் தவறுவது இறைவனுக்கும் மனிதனுக்கும் எதிரான பாவம் என அவர் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைக்கப்பட்டு, இந்து மத தலித் மக்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு இந்திய அரசு இதுவரை எவ்வித பதில் மொழியும் வழங்காதிருப்பது குறித்து தன் கவலையை அச்செய்தியில் தெரிவித்துள்ளார் செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன்.
நீதி அமைதி மற்றும் மகிழ்வு நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் எடுக்கும் முயற்சிகள், மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் தலித் இஸ்லாமியர்களுக்கும் சர்நிகர் உரிமைகள் கிட்டுவதற்கு நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் ஆகியவைகளில் இறைவனே நம்மை வழிநடத்துகிறார் என்ற நம்பிக்கையை இந்த தலித் ஞாயிறு நம்மில் உருவாக்குவதாக என ஆயர் நீதிநாதன் தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.
தலித் மக்களுக்கானப் போராட்டத்தில் பலன் தரும் நடவடிக்கைகள் என நான்கு பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார் ஆயர் நீதிநாதன்.








All the contents on this site are copyrighted ©.