2011-12-02 15:28:31

பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டின் அங்கத்தினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை


டிச.02,2011. திருச்சபை மற்றும் திருப்பீடத்தின் தனிப்பட்ட கவனத்தை ஈர்த்துள்ள பல்கலைக் கழக மாணவர்கள் திருச்சபையின் பணிகளில் முனைப்புடன் ஈடுபடக்கூடிய நாயகர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன் முதல் சனிக்கிழமை வரை வத்திக்கானில் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று வரும் பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டின் அங்கத்தினர்களை இவ்வெள்ளி மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, 'பன்னாட்டு மாணவர்களும், கலாச்சாரங்களின் சங்கமும்' என்று மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மையக் கருத்து தன்னை அதிகம் கவர்ந்துள்ளது என்று எடுத்துரைத்தார்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்கள் கலாச்சரங்களை மட்டும் கொண்டு முழு உணமையையும், வளர்ச்சியையும் அடையமுடியாது என்றுரைத்த திருத்தந்தை, முழு மனிதத்தை உணர்வதற்கு கலாச்சரங்களுக்கு இடையே நிகழ வேண்டிய உரையாடலின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த கல்வியை எந்த ஒரு நாடும் தனித்து வழங்க முடியாது என்ற உண்மை உலக அளவில் உணரப்பட்டுள்ளதால், நாடு விட்டு நாடு மாணவர்கள் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்பதை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உயர்கல்வி என்பது திருச்சபையின் ஒரு முக்கிய பணி என்பதை சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நற்செய்தியின் பணியை நிறைவுக்குக் கொணர்வதில் பல்கலைக் கழகங்கள் தனிப்பட்ட இடம் வகிக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.
அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் வளர்வதற்கு இளையோர் பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெறும் வேளையில், கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும் அன்பிலும் அவர்கள் வளர்வதற்கு தன் செபங்கள் உண்டு என்ற உறுதியுடன் திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.