2011-12-02 15:28:06

அனைத்துலக இறையியல் அவை அங்கத்தினர்களுக்குத் திருத்தந்தையின் உரை


டிச.02,2011. மீட்பைப் புரிந்து கொள்ளுதலை ஒளிர்விக்க வரும் இறைமகனுக்காக காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில், நம் எதிர்பார்ப்புகளின் நம்பிக்கையை உயிரூட்டமுடையதாக வைத்திருப்போம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
அனைத்துலக இறையியல் அவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வோரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, இறைவன் பற்றிய கேள்வி, ஒரே கடவுள் கொள்கை, திருச்சபை சமூகக்கோட்பாடுகளின் அர்த்தம் போன்றவை குறித்து அண்மைக் காலங்களில் இந்த இறையியல் அவை விவாதித்து வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
மூவொரு கடவுள் கொள்கையின் ஒளியில் ஒரே கடவுள் கொள்கை குறித்து விளக்கமளித்த பாப்பிறை, இது மனிதர்களிடையே சகோதரத்துவம் பற்றிய எண்ணங்களை நமக்கு ஒளிர்விக்கின்றது என்றார். இறையியல் மெய்யியலுடன் நடத்தும் பலன் தரும் பேச்ச்சுவார்த்தைகள், தனிமனித மற்றும் அனைத்துலக அமைதிக்கு உண்மையான மூல ஆதாரமாக இருக்க முடியும் என மேலும் எடுத்துரைத்தார்.
விசுவாசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையேயுள்ள உறவுக்கு கத்தோலிக்கத் திருச்சபை முக்கியத்துவம் கொடுத்ததன் வழியேதான் பல்கலைக்கழகங்கள் பிறந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
பகுத்தறிவுக்கு எதிரான வன்முறை மதத்தையும், மதத்திற்கு எதிரான பகுத்தறிவையும் தவிர்க்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, பொதுநலனுக்கான நம் பணியின் போது, நம்மோடு விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுடனும் நாம் ஒத்துழைத்து, சமூகத்திற்கான நம் உண்மையான மற்றும் ஆழமான அர்ப்பணத்தை வெளிப்படுத்தவேண்டிய தேவையை வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.