2011-12-01 15:36:47

பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகும்


டிச.01,2011. NATO துருப்புக்கள் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளில் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளதால், பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகும் என்ற பயம் உருவாகியுள்ளது.
அரசால் தடை செய்யப்பட்டுள்ள "Jamaatud Dawa" என்ற ஒரு மாணவர் அமைப்பு, NATO தாக்குதல்களால் கோபமடைந்து, அமெரிக்காவிற்கு எதிராகப் புனிதப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்ற அறைகூவலுடன் இப்புதனன்று லாகூரில் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் கடந்த சில நாட்களாக அதிக ஆவேசத்துடன் செயல் பட்டு வருவதாகவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக உருவாகியுள்ள பகையுணர்வு, கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் திருப்பப்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்றும் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக் குழுவின் இயக்குனர் அருள்தந்தை Yousaf Emmanuel, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
NATO மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதல்களால் கிறிஸ்தவர்களும் கோபமடைந்துள்ளனர் என்றாலும் அமைதியையும், ஒப்புரவையும் வளர்க்கும் முயற்சிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அருள்தந்தை Emmanuel எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.