2011-11-30 15:31:12

டிசம்பர் 01. வாழ்ந்தவர் வழியில்........ மேதா பட்கர்


இந்தியாவில் பரவலாக அறியப்படும் சமூக உரிமைப் போராளி
மேதா பட்கர், மும்பையில் 1954ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி பிறந்தார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் எழுப்பியதன் மூலம் இவர் பிரபலமானார்.
வசந்த் கனோல்க்கர் என்னும் தொழிலாளர் தலைவருக்கும், இந்து கனோல்க்கருக்கும் மகளாகப் பிறந்த இவர் அரசியலிலும் சமூகவியலிலும் உரிமைக்கான உணர்வுடையப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். இவருடைய தந்தை இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றில் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் ஸ்வதார் (Swadar) எனும் நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்துப் பணியாற்றினார். மேதா பட்கரின் பெற்றோர்களின் விழிப்புணர்வும் தொண்டும் அவருடைய கொள்கைகள் மற்றும் கருத்துகளைச் செதுக்கின.
சமூகப் பணியியலில் முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் ஏழு ஆண்டுகள் தன்னார்வலர் நிறுவனங்களில் பணியாற்றினார் மேதா பட்கர்.
சமூக விழிப்புணர்வுப் பணிகளுக்கென, Amnesty International எனும் பன்னாட்டு பொதுமன்னிப்பு அவையின் மனித உரிமை காப்பாளர் விருது, 1991ம் ஆண்டின் ‘வாழ்வாதாரங்களுக்கான உரிமை’ விருது (Right Livelihood Award), எம்.ஏ. தாமஸ் தேசிய மனித உரிமை விருது, மகாத்மா பூலே விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார் மேதா பட்கர். தற்போதும் இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையராகச் செயலாற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.