2011-11-30 15:54:02

கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வாவின் கிறிஸ்து பிறப்பு விழா அழைப்பு


நவ.30,2011. கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம் இவ்விழா கொண்டுவரும் அமைதி, நம்பிக்கை ஆகிய உயர்ந்த எண்ணங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கருவிகளாக இருக்க வேண்டும் என்று கட்டக் புபனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
திருவருகைக் காலத்தின் துவக்கத்தில் தன் உயர் மறைமாவட்ட கத்தோலிக்க விசுவாசிகளுக்கு செய்தி வெளியிட்ட பேராயர் பார்வா, கடவுள் நம்முடன் என்ற கிறிஸ்மஸ் நாட்களின் முக்கியச் செய்தியை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தவர்களில் இன்னும் 30,000க்கும் அதிகமானோர் அரசின் முகாம்களில் தங்கியிருக்கும் அவல நிலையைத் தன் மடலில் சுட்டிக் காட்டியுள்ள பேராயர் பார்வா, தான் அண்மையில் அப்பகுதியில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணங்களில் மக்கள் மத்தியில் நம்பிக்கை தளராமல் இருப்பதைக் காண முடிந்ததென்று கூறியுள்ளார்.
மறைமாவட்டமும், கத்தோலிக்கச் சமுதாயமும் ஒன்றிணைந்து அப்பகுதியில் மேற்கொண்டுள்ள முயற்சிகளால் இதுவரை 3500 பேருக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்பதையும் பேராயர் தன் மடலில் எடுத்துரைத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.