2011-11-29 14:52:54

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 94


RealAudioMP3 இது ஒரு உண்மை நிகழ்வு. அவர் 45 வயதுமிக்க பெண்மணி. திருமண வயதிலிருக்கும் 3 பிள்ளைகளுக்குத் தாய். தன் இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். தன் சொந்த உழைப்பால் பிள்ளைகளை வளர்த்தெடுத்தவர். அவருடைய மூத்த மகளுக்கு அடுத்தமாதம் திருமணமென்பதால், சீட்டுக் கம்பெனியில் சேர்த்து வைத்திருந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அத்தாயின் கையிலிருந்த பணம் அடங்கிய மஞ்சள் பையை ஒருவன் பறித்துக் கொண்டு ஓடினான். சிறிது தூரம் அவனை துரத்திப் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பணத்தை பிடுங்கியவன் மின்னலாய் ஓடி மறைந்தான். அந்த தாய் சாலையின் நடுவில் நின்று, “அடேய் நீ நல்லா இருப்பியா? குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சதுடா. இப்படி புடுங்கிட்டு போய்ட்டியே. போடா போ. நான் கும்புடுற சாமி, உன்ன சும்மா விடாது. என் வயித்தெரிச்சல் உன்ன சும்மா விடாது” என தன் மார்பிலும், தலையிலுமாக அடித்துக் கொண்டு, மண்ணை வாரித் தூற்றினார்.

அன்பார்ந்தவர்களே! இதே போன்று இஸ்ரயேல் மக்களின் வயிற்றெரிச்சலாக வெளிப்பட்டதுதான் நாம் இன்று சிந்திக்கின்றத் திருப்பாடல் 94. யூதாவிலிருந்து பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், 70 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நாடு திரும்பியதும், இத்திருப்பாடல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என விவிலிய ஆசிரியர்கள் கணிக்கின்றனர். 70ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்டு, பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரயேல் மக்களின் உள்ளக்குமுறல்தான் இத்திருப்பாடலின் முதற்பகுதி.
எங்களது யாவே இறைவன் சிறந்த நீதிபதி. அநீதிக்கு அநீதியை தண்டனையாகக் கொடுப்பார். நீங்கள் செய்யும் அக்கிரமங்களை அவர் கண்டுகொள்ளவில்லை என நினைக்கிறீர்கள். “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்று சொல்வார்கள். அதைப்போல எங்கள் யாவே இறைவன் உங்களது அநீதச் செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். நிச்சயமாக உங்கள் செயல்களுக்கானத் தண்டனையை அளிப்பார் என்று யாவே இறைவன் மீது வைத்த நம்பிக்கையையும் பாபிலோனியர்களின் மீதிருந்த கோபத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இதைத்தான் இத்திருப்பாடலின் 1,2 மற்றும் 4 முதல் 7முடிய சொற்றொடர்கள் சொல்கின்றன.
அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா! ஆண்டவரே! அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா, ஒளிர்ந்திடும்!
உலகின் நீதிபதியே, எழுந்தருளும்; செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும்.
அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்; தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்.
ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர்.
ஆண்டவர் இதைக் கண்டு கொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை' என்கின்றனர்.

அன்பார்ந்தவர்களே! அநீதி இழைத்தவர் தண்டனை பெற வேண்டும், அழிக்கப்படவேண்டும் என்பதுதான் நீதி. எல்லா மனித உள்ளங்களும் இதைத்தான் எதிர்பார்த்தன, எதிர்பார்க்கின்றன. நாடகங்களாக இருக்கட்டும், தொலைக்காட்சித் தொடர்களாக இருக்கட்டும், அல்லது திரைப்படங்களாக இருக்கட்டும் கதாநாயகனும் வில்லனும் சந்திக்கின்றபோது, “அவன்தான், அவன்தான், அவனை விடாதே. அடி, கொல்” என எத்தனை முறைகள் நாம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம்.
இன்று நீதி மறுக்கப்படும் போதும், ஏமாற்றப்படும் போதும் நம்மிலிருந்து வெளிவரும் உள்ளக்குமுறல்கள், இஸ்ரயேல் மக்களின் உள்ளக்குமுறல்களை ஒத்ததாகவே உள்ளது. ஆனால் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இயேசுவின் சிந்தனை இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டதாக இருந்தது என்பது ஆச்சரியத்துக்குரியதுதான்.
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்கின்றபோது, எல்லாம் சரியாகிவிடும் நான் உடனிருக்கிறேன், நாங்கள் உடனிருக்கிறோம், எல்லா உதவிகளையும் செய்கிறோம் என்று ஆறுதல் சொல்வதைவிட துன்பத்திற்குக் காரணமானவர்களைச் சாடுவதிலும், அவர்களை அழித்துவிடலாம், பழிதீர்த்துவிடலாம் என்பதாகத்தான் நமது ஆறுதல்கள் அமைந்து விடுகின்றன.
ஆனால், இயேசு சொன்ன ஆறுதல் கோபமாகவோ, சாபமாகவோ, அல்லது தண்டனையாகவோ வெளிப்படவில்லை. மாறாக நம்பிக்கையாக வெளிப்பட்டது. உங்களை துன்புறுத்தியவர்களுக்குத் தண்டனை என்று அவர் சொல்லவில்லை. மாறாக துன்ப்படுகிறவர்களே, நீங்கள் ஆறுதல் பெறுவீர்கள் என்று அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறார். இதைத்தான் இயேசுவின் மலைப்பொழிவில் காண்கிறோம். மத்தேயு பிரிவு 5, சொற்றொடர்கள் 4,10,11,12
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

அன்பார்ந்தவர்களே! இயேசுவின் கனவு, அன்பான, அமைதியான உலகை உருவாக்குவதுதான். 2000 ஆண்டுகளாக இயேசுவின் நற்செய்தி போதிக்கப்படுகிறது. 2000 ஆண்டுகளாக இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பிறகு இயேசுவின் கனவு நினைவாக விட்டாலும் பரவாயில்லை. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல்’ என்ற பழிவாங்குகின்ற பழைய மனநிலைக்கு திரும்பாமல் இருக்கலாமல்லவா?
ஆனால், இன்றைய சமுதாயம் முழுமையாக பழிவாங்குகின்ற எதிர்மறையான மதிப்பீட்டில் வளர்ந்துவருகிறது. பழிவாங்குவதை ஏன் மதிப்பீடு என்று சொல்கிறேன் என்றால் 20,30 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்ச்சி என்பது மதிப்பீடாக கற்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தாழ்ச்சி என்பதற்குப் பதிலாக தன்உயர்வு (Self Esteem) என்ற மாற்று மதிப்பீடானது முன்வைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய சந்ததியினருக்குத் தாழ்ச்சி என்பது ஒரு புண்ணியமா? என்பதே ஒரு கேள்விக்குறிதான்.
அதே போன்று 10,20 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னிப்பு என்பது மிக முக்கியமான மதிப்பீடு. ஆனால் இன்று பழிவாங்குகின்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. இவ்வாறு கிறிஸ்தவ சமயத்தின் அக்மார்க் முத்திரையான மன்னிப்பு, இரக்கம் என்ற மதிப்பீடுகள் இன்று நீதி என்ற போர்வையிலே பழிவாங்குகின்ற மதிப்பீடாக மாறிவருகிறதோ என்ற ஐயமும், அச்சமும் என்னில் எழுந்துள்ளன. தண்டிக்கின்ற, பழிவாங்குகின்ற எண்ணங்கள் அதிகமாக மக்கள் மனங்களில் வளர்த்தெடுக்கின்ற காரணிகளில் திரைப்படங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
கடந்த 10ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களில் மன்னிப்பை மையப்படுத்திய திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வில்லன்கள் செய்த அநீதிக்கு பழிவாங்குவதே பெரும்பாலான படங்களின் கதை. அம்மாதிரியான படங்கள்தான் மிகப்பெரிய வெற்றியடைந்தன என்பது மிகவும் வருத்ததுக்குரிய செய்தி. மீண்டும் மீண்டும் இம்மாதிரியான கருத்தாக்கங்கள் புகுத்தப்படும்போது, மன்னிப்பு என்பது மாறி, பழிவாங்குவதும் தண்டிப்பதும்தான் மதிப்பீடு என்ற நிலைதான் உருவாகிவருகிறது.

அன்பார்ந்தவர்களே! மாற்று மதிப்பிடுகளின் உருவாக்கத்திலும் அவற்றை நடைமுறைபடுத்துவதிலும் உளவியலாளர்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். நீதி மறுக்கப்பட்டவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் மனதில் கோபம் இருக்கிறது. அந்த கோபம் வெளிவந்தால்தான் பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக குணம் பெற முடியும். எனவே கோபத்தை வெளிக்கொணர வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கே கோபத்தை வெளிக்கொணர வேண்டும் என்பது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்தை மருத்துவர் பயன்படுத்த வேண்டும். எல்லாருமே மருத்துவரைப் போல மருந்தைப் பயன்படுத்த நினைத்தால் மருந்தும் விஷமாகும். அதே போல கோபத்தை வெளிக்கொணரவேண்டும் என்ற உளவியலாளர்களின் மருந்தானது, தவறு செய்தவருக்கு எப்படியாவது தண்டனை வாங்கித்தர வேண்டும், எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று தவறாக எண்ணப்படுவதால் விஷமாக மாறிவருகிறது, வளர்ந்து வருகிறது.
பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கச் செய்வது சரி. அநீதி செய்தவருக்கு தண்டனை என்பதும் சரி. ஆனால் அநீதி இழைத்தவர் தண்டிக்கப்பட்டால் தான் பாதிக்கப்பட்டவர் முற்றிலும் குணம் பெறுவார். எனவே, அநீதி இழைத்தவருக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று சொல்வது சரியா? இது நீதியை நிலைநாட்டுவது என்பதைக் காட்டிலும் பழிவாங்குவதையே முன்னிறுத்துகிறது என்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது.

அன்பார்ந்தவர்களே! இன்றைய நிகழ்ச்சியின் துவக்கத்தில் சொன்ன உண்மை நிகழ்வு அதோடு முடிந்துவிடவில்லை. அடுத்தநாள், அத்தாயின் கண்ணீரை, புலம்பலை செய்தித்தாள் வழியாக அறிந்து, திருடியவன் மீண்டுமாக அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தான். அத்தாய்க்கு பணம் கிடைக்க வேண்டும் அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரிதான். ஆனால், அப்பணம் கிடைத்தபிறகும் எனக்கு நிம்மதி இல்லை. பணத்தைத் திருடியவன் தண்டிக்கப்பட்டால்தான், பழிவாங்கப்பட்டால்தான் நிம்மதி கிடைக்கும் என்று சொல்வது தவறல்லவா?
தவறு செய்தவருக்குத் தண்டனை வாங்கித்தருவதும், பழிவாங்குவதும் இப்போதைக்கு சரியாகத் தோன்றலாம் ஆனால் நீண்ட காலஓட்டத்தில் எப்படி இருக்கும்? நிச்சயமாகப் பழிவாங்குவது ஒரு மதிப்பீடாக மாறிவிடும். கோபத்தை வெளிக்கொணர எழுதித் தீர்க்கலாம் அல்லது வார்த்தைகளால் திட்டித் தீர்க்கலாம் அல்லது தலையணை போன்றவற்றில் ஆத்திரம் தீரும் வரை குத்தித் தீர்க்கலாம் எனப் பலவழிமுறைகளையும் உளவியலாளர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பழிவாங்கினால் தான் மனசு ஆறும் என்பது பண்பட்ட மனநிலையல்ல. அப்படி பழிவாங்க ஆரம்பித்தால் தண்டனைக் கொடுக்க ஆரம்பித்தால் உலகில் ஒரு மனித உயிரும் மிஞ்சாது. தண்டிப்பது நீதியாக இருந்தாலும் தண்டிக்காமல் மன்னிப்பதுதான் உண்மையான மன்னிப்பு. அதுவே மன்னிப்பின் மகத்துவம்.








All the contents on this site are copyrighted ©.