2011-11-29 14:52:26

நவம்பர் 30, வாழ்ந்தவர் வழியில்... மார்க் டுவைன் (Mark Twain)


மார்க் டுவைன் (Mark Twain) என்பது, அமெரிக்க நகைச்சுவையாளரும், நையாண்டியாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆன சாமுவேல் லாங்கார்ன் கிளமென்ஸ் (Samuel Langhorne Clemens) என்பவரின் புனைப்பெயர் ஆகும். இவர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், மிசூரியில் 1835ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்தார்.
அச்சகத்தில் எழுத்து கோர்க்கும் பணியில் வாழ்வைத் துவக்கிய மார்க் டுவைன், எழுதுவதில் தனக்குள்ள திறமையை விரைவில் பிறரறியச் செய்தார். இவர் எழுதிய புதினங்களில், டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) என்பதும், அதன் தொடர்ச்சியான ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (The Adventures of Huckleberry Finn), என்பதும் குறிப்பிடத்தக்கவை.
தன் படைப்புகள் மூலம் சக எழுத்தாளரிடையிலும், மக்களிடையிலும் பெரும் புகழ் பெற்றார் மார்க் டுவைன். அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் ஃபால்க்னர், இவரை அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என்றார்.
இவர் பிறந்த 1835ம் ஆண்டு Haley என்ற வால் விண்மீன் பூமிக்கருகே வந்ததால், அனைவரும் பார்க்க முடிந்தது. 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அந்த வால் விண்மீன் மீண்டும் 1910ம் ஆண்டு வரும் என்று எதிர்பார்த்த வேளையில், மார்க் டுவைன் 'நான் Haley விண்மீனோடு வந்தேன், அது மீண்டும் வரும்போது நான் இவ்வுலகை விட்டுச் செல்ல விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார். அதேபோல் Haley விண்மீன் தோன்றிய 1910ம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் மார்க் டுவைன் உலக வாழ்விலிருந்து விடைபெற்றார்.








All the contents on this site are copyrighted ©.