2011-11-28 15:34:07

இயற்கையைக் காப்பது இளையோரின் கடமை என்கிறார் பாப்பிறை


நவ.28,2011. இறைவனின் அழகு மற்றும் நன்மைத்தனம் குறித்து நமக்குச் சொல்லித் தரும் புத்தகமே இயற்கை என்பதை புனித பிரான்சிஸ் அசிசி நமக்குக் கற்றுத் தருகிறார் என இத்தாலிய மாணவர் அமைப்பு ஒன்றிற்கு இத்திங்களன்று உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'இயற்கை எனும் சகோதரி' என்ற அமைப்பின் அங்கத்தினர்களான ஏறத்தாழ 7000 இத்தாலிய மாணவர்களைத் திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் சந்தித்த பாப்பிறை, நிலமனைத்தையும் காய்கறி பயிரிட மட்டும் என பயன்படுத்தாமல், பூச்செடிகளை வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும் என புனித பிரான்சிஸ் அசிசி தன் துறவிகளுக்குக் கட்டளையிட்டதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இன்றைய உலகின் முக்கிய ஆய்வுகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பாராட்டும் திருச்சபை, அதே வேளை, இயற்கையில் இறைவனின் கைவண்ணத்தைக் கண்டு ஏற்பது, நம் உண்மையான தனித்தன்மையை புரிந்துகொள்ள உதவுகிறது என்பதிலும் உறுதியாக உள்ளது என்றார் திருத்தந்தை. படைப்பில் மனிதன் இறைவனோடு ஒத்துழைக்க மறந்தானாகில் அது இயற்கைக்கும் அதன் வழி மனித குலத்திற்கும் எதிர்மறை விளைவுகளைக் கொணரும் என்பதையும் மாணவர்களுக்கு நினைவூட்டினார் பாப்பிறை. இயற்கையை மதித்தலும் மனிதனை மதித்தலும் ஒன்றே என்ற திருத்தந்தை, வாழ்வு மற்றும் இயற்கையின் பாதுகாவலர்களாகச் செயல்படவேண்டியது இளையோரின் கடமையாகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.