2011-11-26 15:03:32

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 அடுத்த ஆண்டு இந்நேரம் நம்மில் ஒரு சிலர் அல்லது வெகு பலர் கலக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருப்போம். இந்த உலகம் முடியப்போகிறது என்ற கலக்கம் அது. ஆம், 21-12-2012 அதாவது 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி இந்த உலகம் முடியப்போகிறது என்று மெக்சிகோ நாட்டின் பழம்பெரும் மாயன் கலாச்சாரத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்.
மனித வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், உலகம் முடியப்போகிறது என்ற செய்தி அடிக்கடி பேசப்பட்டுள்ளது. கி.பி.204ம் ஆண்டு Hippolytus என்ற கிறிஸ்தவ எழுத்தாளர் அப்போது வாழ்ந்த ஆயர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். உலகம் முடியப்போகிறது என்பதைத் தீவிரமாக நம்பிய அந்த ஆயர், தன் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தார். அவர்களிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அவருடன் பாலை நிலத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அங்கு அவர்கள் இறைவனின் வரவுக்குக் காத்திருக்கலாம் என்று சொன்னார்.
கி.பி.999ம் ஆண்டின் இறுதி நாட்களில் உலகம் முடியப்போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் உரோம் நகரில் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும் உலக முடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் உலக முடிவு வந்துவிட்டது என்று தீர்மானித்த இரு குழுக்கள் வேதனையான முடிவுகள் எடுத்ததை செய்திகளில் வாசித்தோம். 1978ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் உலக முடிவு வந்துவிட்டதென்று உணர்ந்த இரு குழுவினர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தன. 1999ம் ஆண்டு முடிந்து 2000மாம் ஆண்டு ஆரம்பமாக இருந்தபோது இதே கலக்கம் மீண்டும் தலைதூக்கியது நமக்கு நினைவிருக்கலாம்.
நான் சென்னையில் பலமுறை பார்த்த ஒரு காட்சி என் நினைவுக்கு வருகிறது. அவ்வப்போது, சாலையோரங்களில் யாராவது ஒருவர் நின்று கொண்டு, போவோர் வருவோர் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை அல்லது சிறு புத்தகங்களை இலவசமாக வழங்குவதைப் பார்த்திருக்கிறேன். என் கைகளிலும் அவை திணிக்கப்பட்டன. அந்தப் பிரசுரங்களில் நான் பலமுறை பார்த்த ஒரு செய்தி: "ஆண்டவரின் நாள் அண்மித்துவிட்டது... விழித்தெழு" என்ற செய்தி. ஒவ்வொரு முறையும் உலகில் நிலநடுக்கம், எரிமலை வெடித்தல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது, உலகமுடிவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், சிந்திக்கிறோம்.

இன்று தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்ல முடியாது. 2012ம் ஆண்டு வரலாம், அல்லது, 20012ம் ஆண்டு வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பது நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவைகளைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தால் பயனுண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.
மாற்கு நற்செய்தி 13: 33-37
அக்காலத்தில், மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களிடம் கூறியது: கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள்.

விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு. பொறுப்புடன் நடந்து கொள்வது என்பது, தலைவர் இருக்கும்போது நல்ல பெயர் எடுக்க வேண்டும்; அவர் இல்லாதபோது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று நடிப்பது அல்ல. தலைவர் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை எல்லா நேரத்திலும் நானும் மதித்து நடந்து கொள்வதுதான் உண்மையான பொறுப்புணர்வு.
இத்தாலி நாட்டின் வடபகுதியில் Villa Asconti என்ற மிக அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச் சுற்றி அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்து வந்த இந்த மாளிகையும் தோட்டமும் ஒருவரது மேற்பார்வையில் எந்தக் குறையும் இல்லாமல் விளங்கியது. ஒருநாள் சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மேற்பார்வையாளரிடம், "இந்த மாளிகையின் உரிமையாளர் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன?" என்று கேட்டார். மேற்பார்வையாளர், "12 ஆண்டுகள் ஆகின்றன" என்று சொன்னார். "ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று முதலாளி எதுவும் கடிதமோ வேறு தொடர்போ வைத்துள்ளாரா?" என்று கேட்டதற்கு, அவர், "இல்லை" என்று பதில் சொன்னார். "நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம் செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சொன்ன அந்த சுற்றுலாப் பயணியைப் பார்த்து சிரித்தார் மேற்பார்வையாளர். பின்னர், "நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்" என்று பதில் சொன்னார்.
12 ஆண்டுகளாய் ஒவ்வொரு நாளும் 'தலைவன் இன்றே வரக்கூடும்' என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளைச் செய்த இந்த மேற்பார்வையாளரைப் போல் நாம் இருக்க வேண்டும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
தலைவன் வந்தாலும் சரி, வராவிடினும் சரி என்று தன் பணிகளை ஒழுங்காகச் செய்த இவர், மற்றொரு சம்பவத்தை நினைவுறுத்துகிறார். 20th Century Fox என்ற திரைப்பட நிறுவனம் 'விற்பனை செய்யும் திறமை பெற்றவர் ஒருவர் தேவை' என்று ஒருமுறை விளம்பரம் வெளியிட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த விளம்பரத்திற்குப் பதில் அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி அனுப்பியிருந்த பதில் நிறுவனத்தினரின் கவனத்தை ஈர்த்தது. "நான் தற்போது ஒரு கடையில் மேசை, நாற்காலிகள் விற்கும் பணி செய்து வருகிறேன். இந்தக் கடைக்கு நீங்கள் வந்தால் என்னை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இங்கிருக்கும் பணியாளர்களில் எனக்கு மட்டுமே தலைமுடி சிவந்த நிறத்தில் உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி நீங்கள் கடைக்கு வந்து நான் பணிசெய்யும் விதத்தைக் கவனிக்கலாம். நீங்கள் யாரென்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்கள் நன்மதிப்பைப் பெறும் வகையில், நீங்கள் வரும் நேரம் மட்டும் நான் வித்தியாசமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. நான் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யும் திறமையையே நீங்கள் வரும் நாளிலும் நான் வெளிப்படுத்துவேன். அந்தத் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு உங்கள் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுங்கள்." என்று அந்தப் பெண் எழுதியிருந்தார். வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்த பல ஆயிரம் பேரில் அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லவும் வேண்டுமா?

ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், பிறரது கவனம் நம்மீது இருக்கிறது என்பதை உணரும் நேரங்களில் நாம் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கும். அதுவும் நாம் சந்திக்கச் செல்வது மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நாம் நடந்து கொள்வோம். கைக்குழந்தைகளிடமும், மிகவும் வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிடமும் இந்த மாறுதல்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்த நேரத்திலும் ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாக வேண்டும்.
"A joyful heart is more easily made perfect than a downcast one." "துக்கத்தில் வாழும் ஒரு மனதைவிட, மகிழ்வுடன் வாழும் மனம் எளிதில் உன்னதத்தை அடையும்" என்ற தனது விருதுவாக்கிற்கு ஏற்ப, நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம்.
சாவை பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள் அதைக் கண்டு பயப்படலாம். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, சாவைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும் நல்ல விதமாக பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு சாவு எந்த வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு பிலிப் நேரி ஒரு நல்ல உதாரணம். சாவின் வழியாகத் தன்னைச் சந்திக்கப் போவது அல்லது தான் சென்றடையப் போவது இறைவன் தான் என்றான பிறகு ஏன் பயம், பரபரப்பு எல்லாம்? தேவையில்லையே. பிலிப் நேரியைப் பொறுத்தவரை நான் இப்படியும் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த நண்பர் சொன்னது போலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில் அந்த இறைவனோடு தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார் பிலிப். வாழ்க்கையில் இறைவனை அடிக்கடி சந்தித்து வந்த பிலிப்புக்கு பயம் பரபரப்பு எதற்கு? இந்த நிலை எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு பாக்கியம் அல்ல.
ஜான் வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது பொறுப்புடன் சரியான கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன்ஐ மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது என் இறைவன் முகத்தில் விழிப்பேன்." என்று சொன்னாராம்.

உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவைகளை நாம் எவ்வகையில் பார்க்கிறோம் என்பதை ஆய்வு செய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமையவேண்டும் என்று சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.