2011-11-26 15:10:31

அமெரிக்க ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை


நவ.26,2011. இறைவனை விட்டு மேலும் மேலும் விலகியிருக்க முயலும் இன்றைய சமுதாயத்தில் கிறிஸ்தவ சாட்சியம் எதிர்நோக்கும் பெரும் சவால்களைக் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் காட்டும் அக்கறையில் தானும் பங்கு கொள்வதாக உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆமெரிக்க ஆயர்களை இந்த சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இறைவனிடமிருந்து ஒதுங்கியிருக்க முயலும் மனப்போக்கு அதிகரித்து வருகின்ற போதிலும், இன்றைய மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே வருங்காலம் குறித்த ஒருவித பாதுகாப்பற்ற நிலையையும் காண முடிகிறது என்றார். இன்றைய திடீர் மாற்றங்கள் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் பலர் ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காக திருச்சபையை நோக்கி வருவதும் இடம் பெறுகின்றது என்று கூறிய திருத்தந்தை, இத்தகையச் சூழல்களில் ஆயர்களின் பணியானது ஒழுக்க ரீதி உண்மைகளைப் பாதுகாப்பதாகவும், நம்பிக்கையின் வார்த்தைகளை வழங்குவதாகவும், உண்மையை நோக்கி மக்களின் மனங்களை திறப்பதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வெளியிட்ட, பிரமாணிக்கக் குடியுரிமை மற்றும் திருமணம் பற்றிய சுற்றுமடல்கள் குறித்து தன் பாராட்டுதல்களையும் வெளியிட்டார் பாப்பிறை.
தான் 2008ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டபோது, ஆயர்களுடன் விவாதித்த கருப்பொருட்கள் குறித்து மீண்டும் இங்கு எடுத்தியம்பினார் திருத்தந்தை. தலத்திருச்சபையில் குருக்களால் சிறார்கள் தவறாக நடத்தப்பட்டது குறித்து எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் புதிய நற்செய்தி அறிவிப்புக்கென எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் ஆகியவை குறித்தும் அமெரிக்க ஆயர்களோடு விவாதித்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.