2011-11-25 15:13:24

பெண்கள் முன்னேற்றத்திற்கு இளையோர் முக்கிய கருவிகளாக மாற வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்


நவ.25,2011. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஒழிக்க மனித சமுதாயம் முழுவதும், முக்கியமாக, இளையோர் சமுதாயம் இன்னும் அதிக தீர்மானத்துடன் செயல்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை அகற்றும் உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படும் இவ்வுலகநாளையொட்டி, இப்புதனன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலும் ஒழியும் வரை ஆண் பெண் சமத்துவம் நிலைபெறாது என்று கூறினார்.
ஆண்மை என்பதன் உண்மையான பொருளை இளைஞர்களும், வளர் இளம் சிறுவர்களும் சரியான வகையில் உணர்வதே பெண்கள் மீது அவர்கள் மதிப்பு கொள்ளச் செய்யும் ஒரு சிறந்த வழி என்று பான் கி மூன் சுட்டிக் காட்டினார்.
இளையோரிடையே உள்ள சக்திகளை நல்ல வழிகளில் செலவிட்டு, சமுதாய முன்னேற்றத்திற்கும், முக்கியமாக பெண்கள் முன்னேற்றத்திற்கும் இளையோரை கருவிகளாக மாற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் எடுத்தரைத்தார்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் பெண்களை மட்டுமல்லாமல், உலகச் சமுதாயத்தின் பெருமையைச் சீர்குலைக்கிறது என்று ஐ.நா.பெண்கள் அமைப்பின் உயர் இயக்குனர் Michelle Bachelet கூறினார்.
உலகில் 125 நாடுகளில் இல்லங்களில் நடக்கும் வன்முறைகள் குற்றங்களாகக் கருதப்படுகின்றன, மற்றும் 139 நாடுகளில் ஆண், பெண் சமத்துவம் சட்ட ரீதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது என்பவைகளைச் சுட்டிக்காட்டி பேசிய Bachelet, இருப்பினும், உலகில் ஒவ்வொரு 10 பெண்களுக்கு 6 பெண்கள் வன்முறைகளை தங்கள் வாழ்வில் சந்தித்து வருகின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.