2011-11-22 15:06:13

அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் போதனையின் ஒளியில், வாழ்வுக்கான நலவாழ்வு மேய்ப்புப்பணி பன்னாட்டுக் கருத்தரங்கு நவ.24-26


நவ.22,2011. மனித வாழ்வை அன்பு செய்து அதற்குச் சேவை செய்வதற்கு, குறிப்பாக நலிந்தவர்கள் மற்றும் துன்புறுவோருக்குத் தொண்டுபுரிவதற்கு நன்மனம் கொண்ட அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்று திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்க்கான அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கூறினார்.
வத்திக்கானில் திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்க்கான அவை வருகிற வியாழனன்று தொடங்கும் 26வது பன்னாட்டுக் கருத்தரங்கு குறித்து இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் பேசிய பேராயர் Zimowski, இந்தக் கருத்தரங்கானது மனித வாழ்வின் தூய்மையையும் அதன் மாண்பையும் எப்பொழுதும் மதித்துப் பாதுகாப்பதை வலியுறுத்துவதற்கு உதவுவதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
“அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் போதனையின் ஒளியில், வாழ்வுக்கான நலவாழ்வு மேய்ப்புப்பணி” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறும் என்பதையும் பேராயர் குறிப்பிட்டார்.
இந்தியா, மியான்மார், சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் 685 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வதற்குப் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கருத்தரங்கு இம்மாதம் 24 முதல் 26 வரை நடைபெறும்.
மேலும், தலத்திருச்சபைகளில் நலவாழ்வுப் பணிக்குப் பொறுப்பான ஆயர்கள் கூட்டம் இப்புதனன்று நடைபெறும் எனவும், இதில் 39 நாடுகளின் 42 ஆயர்களும் இன்னும் இத்துறையில் தேர்ந்த வல்லுனர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் பேராயர் அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.