2011-11-22 15:06:01

புதிய நற்செய்திப்பணி என்பது கிறிஸ்தவ விசுவாச வாழ்வை வாழ்ந்து அதனைத் தொடர்ந்து அறிவிப்பதாகும் - திருப்பீடச் செயலர்


நவ.22,2011. புதிய நற்செய்திப்பணி என்பது கிறிஸ்தவ விசுவாச வாழ்வை வாழ்ந்து அதனைத் தொடர்ந்து அறிவிப்பதாகும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
புதிய நற்செய்திப் பணி என்பது கிறிஸ்துவின் நற்செய்தியில் பொதிந்து கிடக்கும் புதியனவற்றிற்கும் பழையனவற்றிக்கும் இடையே இருக்கும் உயிர்த்துடிப்புள்ள உறவைப் புரிந்து கொள்வதாகும் என்று மேலும் கூறினார் கர்தினால் பெர்த்தோனே.
CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் அவை உருவாக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டையொட்டி அந்த CCEE அவையும் புதிய நற்செய்திப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையும் சேர்ந்து வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, புதிய நற்செய்திப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தற்போதைய ஐரோப்பாவின் நிலைமையைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால், ஐரோப்பாவில் பாரம்பரிய விழுமியங்களும் சமூகக் கலாச்சாரமும் ஒருபுறம் அழிவை எதிர்நோக்கி வந்தாலும் மறுபுறம் சொந்த வாழ்க்கையில், குறிப்பாக இளையோர் மத்தியில் கடவுளைத் தேடும் முயற்சியையும் காண முடிகின்றது என்று கூறினார்.
எனவே, பழைய காட்டில் புதிய தளிர்கள் வெளிவருவது போல புதிய நற்செய்திப்பணியிலும் புதிய வசந்த காலம் வெளிப்படும் என்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.