2011-11-22 15:06:55

அருள்சகோதரி வல்சா ஜான் கொல்லப்பட்டது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை சந்தேகம்


நவ.22,2011. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அருள்சகோதரி வல்சா ஜான் கொல்லப்பட்டது தொடர்பாக, அப்பகுதியிலுள்ள மாவோயிஸ்டுகளுக்கு நெருக்கமான ஏழு பேரைக் கைது செய்துள்ள காவல்துறை, இத்துடன் இக்கொலை வழக்கு விவகாரத்தை மூடிமறைக்க முயற்சிக்கிறது என்று தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறையின் இந்தத் திடீர் நடவடிக்கை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ள சமூகநலப்பணி மைய இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை Tom Kavalatt, அப்பகுதியின் சக்திவாய்ந்த நிலக்கரி சுரங்க முதலாளிகளோடு தொடர்புடைய குற்றவாளிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நடவடிக்கையாக இது இருக்கின்றது என்று கூறினார்.
இந்த மாதம் 15ம் தேதி இரவு கொடூரமாய்க் கொல்லப்பட்ட அருள்சகோதரி வல்சாவுக்கும் அப்பகுதியின் நிலக்கரி சுரங்க முதலாளிகளுக்கும் இடையே பல தடவைகள் பிரச்சனைகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நிலக்கரி சுரங்கத் தொழில் குற்றக்கும்பல் குறித்த தனது விசாரணையைத் தலத்திருச்சபை தொடர்ந்து செய்து வருகின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.