2011-11-21 15:20:31

நவம்பர் 22 வாழ்ந்தவர் வழியில்..... ஜான் எஃப். கென்னடி


JFK என்ற ஜான் எஃப். கென்னடி என்று புகழ் பெற்ற ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy) 1961ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு அவர் கொலை செய்யப்படும் வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் 35வது அரசுத் தலைவராக இருந்தவர். 1917 ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படை தளபதியாகப் பணிபுரிந்தார். அப்போர் முடிந்த பின்னர் அரசியலில் இறங்கினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 ம் ஆண்டு முதல் 1953 ம் ஆண்டு வரை அமெரிக்கக் கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். 1953 ம் ஆண்டு முதல் 1961 ம் ஆண்டு வரை மேலவை (செனட்) உறுப்பினராக இருந்தார். 1960 ம் ஆண்டில் நடந்த அரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி அரசுத் தலைவரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சர்ட் நிக்சனைத் தோற்கடித்தார் ஜான் எஃப். கென்னடி. புலிட்சர் விருது பெற்ற அமெரிக்கத் தலைவர் இவரே ஒருவரே ஆவார். கியூபாவின் ஏவுகணை விவகாரம், பெர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்கக் குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளை இவரது அரசு சந்திக்க வேண்டியிருந்தது. ஜான் எஃப் கென்னடி, 1963 ம் ஆண்டு நவம்பர் 22 ம் தேதி டெக்சஸ் மாநிலத்தின் டல்லஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டு வரலாற்றில் இருண்ட நாள் என்று கருதப்படுகிறது. ஜான் எஃப் கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்பவன், “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.
“உனது நாடு உனக்கு என்ன செய்ய முடியும் எனக் கேட்காதே, மாறாக நீ உனது நாட்டுக்கு என்ன செய்ய முடியும் எனக் கேள்”;
“எளிதான வாழ்வுக்காகச் செபிக்காதீர்கள், ஆனால் வலிமையான மனிதராக உருவாகச் செபியுங்கள்”;
“மனிதர் இறக்கலாம், நாடுகள் உயர்வடையலாம், வீழ்ந்து போகலாம், ஆனால் உயர்ந்த கருத்துக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்”;
“மாற்றம் என்பது வாழ்வின் சட்டம், கடந்த காலத்தையோ நிகழ்காலத்தையோ பார்த்துக் கொண்டிருப்பவர் எதிர்காலத்தை இழக்கிறார்”;
“அமைதியான புரட்சியை முடியாததாக ஆக்குகின்றவர்களுக்கு வன்முறைப் புரட்சி தவிர்க்க முடியாததாகிறது”;
இவை போன்ற பல கூற்றுக்களை உதிர்த்தவர் ஜான் எஃப் கென்னடி








All the contents on this site are copyrighted ©.