2011-11-21 15:45:59

சாலை பாதுகாப்பு நாள் - ஐ.நா. பொதுச்செயலர் செய்தி


நவ 21, 2011. கடந்த காலங்களில் உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களைக் கௌரவிக்கும் விதமாக, சாலை பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டங்களை அதிகரிப்பதற்கான அர்ப்பணம் வெளியிடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரை நினைவுகூரும் உலக தினம் இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர், வல்லுனர்கள் மற்றும் தனியார்களின் அர்ப்பணத்துடன் அதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்தி,விபத்துத் தடுப்புகளைச் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும்போது தங்கள் உயிரை இழந்த நல்ல உள்ளங்களையும் இந்நாளில் நினைவு கூர்வோம் எனவும் அச்செய்தியில் விண்ணப்பித்துள்ளார் பான் கி மூன்.
ஒவ்வொரு நாளும் உலகில் சாலை விபத்துக்களில் ஏறத்தாழ 3500 பேர் உயிரிழப்பதாகவும், பல ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாகவும் கவலையை வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், இவ்வாறு பாதிக்கப்படுவோருள் பெரும்பான்மையினோர் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்டோர் எனவும் தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துக்களில் 13 இலட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.
2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை, தற்போதய எண்ணிக்கையை விட இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.