2011-11-20 13:50:20

பெனின் நாட்டுத் திருப்பயணத்தின் நிறைவு நாளன்று திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை


நவ.20,2011. கிறிஸ்து அரசர் பெருவிழாவான இன்று பெனின் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பிரெஞ்ச் மொழி பேசும் Togo, Burkina Faso, Niger ஆகிய நாடுகளிலிருந்தும் இங்கு கூடியிருக்கும் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். 150 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் நற்செய்தி விதைக்கப்பட்டதற்கும், ஈராண்டுகளுக்கு முன் உரோம் நகரில் ஆப்ரிக்க ஆயர்களின் சிறப்பு மாமன்றம் நல்ல முறையில் நடந்து முடிந்ததற்கும் நன்றி சொல்ல நாம் அனைவரும் வந்திருக்கிறோம்.
துன்புறுவோர், புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோருடன் தன்னையே ஒன்றிணைக்கும் இறைவன், இவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்பதன் அடிப்படையில் நம்மைத் தீர்ப்பிட வருவார் என்று இப்போது நாம் வாசித்த நற்செய்தியில் கேட்டோம். மனிதராகப் பிறந்து ஏழ்மையிலும் துன்பத்திலும் வாழ்ந்த கிறிஸ்துவையே நாம் இன்று அரசர் என்று கொண்டாடுகிறோம்.
அரசர் என்றால், சக்தி, ஆடம்பரம், செல்வம் என்ற அடையாளங்களை இவ்வுலகம் காட்டும்போது, ஏழ்மையில் வாழ்ந்த கிறிஸ்துவை அரசர் என்று சொல்வது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆயினும், இதுவே நமது புனித நூல்கள் வழியே நமக்குச் சொல்லப்பட்டுள்ள உண்மை. இல்லதாரோடு தன்னையே ஒருங்கிணைத்ததாலேயே கிறிஸ்து இந்த உலகைத் தீர்ப்பிடும் வல்லமை பெற்றுள்ளார்.
இந்தக் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு நாம் பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அவர் காட்டும் புதிய வாழ்வுக்குள் நுழைவதற்கு நமது பழைய வாழ்வை முற்றிலும் களைந்துவிட நாம் தயாராக இருக்க வேண்டும். இறந்த கால உலகிலிருந்து நம்மை அந்த இறைவனே விடுவிப்பார்.
வறுமையிலும், நோயிலும் துன்புறும் பலருடன் கிறிஸ்து தன்னையே ஒருங்கிணைத்துக் கொண்டார். எனவே, இவர்கள் மீது நாம் தனிப்பட்ட மதிப்பு கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் உலகெங்கும் AIDS மற்றும் பல்வேறு நோய்களால் துன்புறுவோருக்கு நான் கூற விழைவது இதுவே: கலங்காதீர்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார். பாப்பிறையான நானும் என் எண்ணங்களாலும், செபங்களாலும் உங்களோடு இருக்கிறேன். கலங்காதீர்கள்.
Benin நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் அற்புத கருவூலமாய் விளங்கிய மதிப்பிற்குரிய கர்தினால் Bernardin Gantinஐ இவ்வேளையில் சிறப்பாக எண்ணிப் பார்க்கிறேன். இவர் வழியாகவும், இன்னும் பல ஆயர்கள், குருக்கள், மறைப்பணியாளர்கள், துறவிகள், மறைகல்வியாளர்கள், மக்கள் அனைவரின் வழியாகவும் 150 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஊன்றப்பட்ட சிலுவையின் ஒளி இந்நாடெங்கிலும் பரவியுள்ளதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
தொடர்ந்து இந்நாட்டிலும், ஆப்ரிக்கக் கண்டத்திலும், இவ்வுலகிலும் கிறிஸ்துவையும், நற்செய்தியையும் ஒளிரச் செய்வது முக்கியமாக இன்றைய இளையோரின் கடமையாகிறது. பல பிரச்சனைகளில் ஆழ்ந்துள்ள இவ்வுலகில் நம்பிக்கையை விதைப்பது இளையோரின் கடினமான பணியாகிறது.
மறைபணியாளர்கள் வழியாக பெனின் நாடு பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளது. தான் பெற்ற நன்மைகளை உலகின் பல நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்நாடு தற்போது அழைக்கப்பட்டுள்ளது. அமைதி, நீதி, ஆதரவு ஆகிய வழிகளில் உலகைக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.

ஆங்கிலத்தில் திருத்தந்தை வழங்கிய வாழ்த்து

நவ.20,2011. கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று உலகெங்கும் இவ்வரசரின் ஆட்சி பரவியுள்ளதற்காக நாம் அனைவரும் மகிழ்கிறோம். ஒப்புரவு, அமைதி, நீதி இவைகளுக்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்குபவர் கிறிஸ்துவே. உண்மையான அரசத் தன்மை சக்தியை வெளிப்படுத்துவதில் அல்ல, மாறாக, தாழ்ச்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளிலேயே நிலைநாட்டப்படுகிறது. வலுவிழந்தோரை ஒடுக்குவதில் அல்ல, மாறாக அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி, அவர்களை நிறை வாழ்விற்கு அழைத்துச் செல்வதிலேயே கிறிஸ்துவின் அரசத் தன்மை வெளிப்படுகிறது. சிலுவையில் இருகரங்களையும் விரித்து அறையப்பட்டுள்ள கிறிஸ்து, அந்த அரியணையிலிருந்து நம் அனைவரையும் அணைத்து ஒன்று சேர்க்கிறார். ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழும் அனைத்து மக்களும் நீதியிலும் அமைதியிலும் வாழ சிறப்பாக மன்றாடுவோம்.
ஆங்கிலம் பேசும் கானா, நைஜீரியா மற்றும் அண்மை நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!








All the contents on this site are copyrighted ©.