2011-11-20 13:50:35

திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருப்பயணம் பெனின் நாட்டுக்கானத் திருப்பயண நிறைவு


நவ.20,2011. இத்தாலிக்கு வெளியே தனது 22வது மேய்ப்புப்பணி திருப்பயணத்தை மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின் நாட்டில் இவ்வெள்ளிக்கிழமை தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்நாட்டு மக்கள் அனைவரின் அன்பு மழையில் நனைந்து வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். Voodoo என்ற ஆப்ரிக்க மரபு மதத்தினர் அதிகமாக வாழும் இந்த பெனின் நாட்டில், இச்சனிக்கிழமை பகல் 12.15 மணியளவில் Ouidah நகர் அமலமரி பசிலிக்காவில், ஆப்ரிக்கச் சிறப்பு ஆயர் மாமன்றத் தீர்மானத் தொகுப்பான "Africae munus" அதாவது “ஆப்ரிக்காவின் அர்ப்பணம்” என்ற ஏட்டில் திருத்தந்தை கையெழுத்திட்டு ஆற்றிய உரையை அப்பசிலிக்காவுக்கு 300 அடி தூரத்தில் தங்களது Voodoo கோவிலில் இருந்து கொண்டே அம்மதக் குருக்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த உரை அவர்களுக்குத் திருப்தி அளித்திருப்பதாகவே ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்த அப்போஸ்தலிக்க ஏட்டில், கத்தோலிக்கர் இசுலாமையும் பிற பாரம்பரிய மதப் பழக்கங்களையும் மதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்று நாள் கொண்ட பெனின் நாட்டுக்கான இத்திருப்பயணத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு, அதாவது இந்திய நேரம் ஞாயிறு பகல் 12.45 மணிக்கு, கொட்டுன்னு திருப்பீடத் தூதரகத்திலிருந்து திறந்த காரில், “Stade de l’Amitie” என்ற அரங்கத்திற்குச் சென்றார். திருத்தந்தை சென்ற இந்த 7 கிலோ மீட்டர் தூரம் வரையும் இந்த மக்கள் தங்களது பல வண்ண மரபு ஆடைகளில் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் நின்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த அரங்கத்தில் காலை 9 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அவரின் திறந்த கார் அரங்கத்தை வலம் வந்த போது, விசுவாசிகள் மஞ்சளும் வெண்மையும் கலந்த பாப்பிறைக் கொடிகளை ஆட்டிக்கொண்டு ஆரவாரித்து தங்களது பாரம்பரியப் பாடலை முழங்கிக் கொண்டிருந்தனர்.

இஞ்ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. இப்பெருவிழாத் திருப்பலியை, திருத்தந்தையுடன், ஆப்ரிக்கக் கண்டத்தின் 200க்கு மேற்பட்ட ஆயர்கள், ஆயிரக்கணக்கான குருக்கள் இணைந்து நிகழ்த்தினர். பெனின் அரசுத்தலைவர் தாமஸ் யாயி போனி உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட இத்திருப்பலியில், முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் பங்கு பெற்றனர். இத்திருப்பலியில் பெனின் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Antoine Ganye முதலில் முன்னுரை வழங்கினார்.

இத்திருப்பலி, இலத்தீன் மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளில் இடம் பெற்றது. ஆயினும் பெனின் நாட்டிலுள்ள சுமார் 40 பூர்வீக இனச் சமூகங்களில் பெரும்பாலானவை தமக்குரிய மொழிகளையும் கொண்டுள்ளன. எனவே வாசகங்கள், bariba, ஆங்கிலம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், mina, yaruba, dendi ஆகிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.. திருத்தந்தை ப்ரெஞ்ச் மொழியில் ஆற்றிய மறையுரையின் சுருக்கத்தைக் கேட்போம்.

உரை 8

இம்மறையுரையின் இறுதியில் fon மொழியிலும் வாழ்த்தினார் திருத்தந்தை. இத்திருப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியான இத்திருப்பலியில் நைஜீரியா, டோகோ, கானா, ஃபுர்க்கினோ பாசோ, ஐவரி கோஸ்ட் போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்டனர். எனவே மறையுரையின் இறுதியில் ஆங்கிலத்தில் பேசி இம்மக்களை வாழ்த்தினார் திருத்தந்தை.

உரை 8 ---

2009ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற ஆப்ரிக்கச் சிறப்பு ஆயர் மாமன்றத் தீர்மானத் தொகுப்பான "Africae munus" என்ற அப்போஸ்தலிக்க ஏட்டையும் இத்திருப்பலியின் இறுதியில், ஆப்ரிக்கத் திருச்சபைக்கு வழங்கினார் திருத்தந்தை. இத்திருப்பயணத்தின் நோக்கமே இதுதான். உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் Nikola Eterovic முதலில் நன்றி தெரிவித்தார். பின்னர் திருத்தந்தையும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

“ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிப் பணிக்கு ஆப்ரிக்காவில் திருச்சபை: நீங்கள் உலகின் உப்பு, நீங்கள் உலகின் ஒளி” என்ற தலைப்பில் 2009ம் ஆண்டு அக்டோபரில் இந்த ஆப்ரிக்கச் சிறப்பு ஆயர் மாமன்றம் நடைபெற்றது. இதற்காக உழைத்த எல்லாருக்கும் நன்றி. "Africae munus" என்ற இந்த அப்போஸ்தலிக்க ஏட்டைப் பெறுவதன் மூலம், இது பரிந்துரைக்கும் இறையியல், திருஅவையியல், ஆன்மீக மற்றும் மேய்ப்புப்பணிக் கூறுகள் தல அளவில் நடைமுறைக்கு வருகின்றன. தலத்திருச்சபைகளில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை இவ்வேடு உற்சாகப்படுத்தி வளர்க்கின்றது. ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத் திருச்சபையை உயிர்த்துடிப்புடன் கட்டி எழுப்பும் மற்ற முயற்சிகளுக்கு இவ்வேடு தூண்டுகோலாய் இருக்கின்றது. இவ்வேடு ஆப்ரிக்காவில் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதற்கு வழிகாட்டியாக அமையும் என நம்புகிறேன். நற்செய்தி அறிவிப்பானது ஒப்புரவைக் கொணர்ந்து அமைதியையும் நீதியையும் வளர்க்கிறது.
இந்த உரைக்குப் பின்னர் "Africae munus" என்ற அப்போஸ்தலிக்க ஏட்டை ஆப்ரிக்க ஆயர் பேரவைகளின் தலைவர்களிடம் கொடுத்தார் பாப்பிறை. பின்னர் மூவேளை செப உரையும் வழங்கினார்.

இப்போது உங்களிடம் கொடுத்துள்ள இந்த "Africae munus" அப்போஸ்தலிக்க ஏட்டை ஆப்ரிக்க அன்னை மரியாவிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். இக்கண்டத்தில் திருச்சபைக்குப் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், ஆப்ரிக்காவின், குறிப்பாக இந்தப் பெனின் மண்ணின் வருங்கால நற்செய்திப் பணிக்கு மரியா துணையாக இருப்பாராக. மரியா, இயேசுவின் தாயாக மாறுவதற்கு இறைவன் விடுத்த அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். கடவுள் இன்று நம்மிடம் ஒப்படைத்த பணியை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை மரியா நமக்குக் காட்டுவாராக. திருக்குடும்பத்துக்குப் புகலிடம் அளித்த ஆப்ரிக்கச் சகோதர சகோதரிகளே, கிறிஸ்தவக் குடும்ப மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முடிவடையாதச் சண்டைகளால் பல குடும்பங்கள் பிரிந்து வேறு இடங்களில் வாழுகின்ற இவ்வேளையில் நீங்கள் ஒப்புரவு மற்றும் நம்பிக்கையின் கைவினைஞர்களாக இருங்கள். ‘மாக்னிபிக்காத்’ (Magnificat) புகழ்கீதம் பாடிய மரியாவோடு இணைந்து என்றும் மகிழ்ச்சியில் நிலைத்திருங்கள்.

என்ற பாப்பிறை, மூவேளை செபம் சொல்லி அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

பின்னர் கொட்டுன்னு திருப்பீடத் தூதரகம் சென்று ஆயர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் மதிய உணவு அருந்தினார். உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு கொட்டுன்னு கர்தினால் பெர்னார்டின் கந்தெய்ன் சர்வதேச விமான நிலையம் சென்று பிரியாவிடை பெற்று உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்துடன் 22வது வெளிநாட்டுத் திருப்பயணமாகவும், பெனின் நாட்டுக்கான முதல் திருப்பயணமாகவும், 53 நாடுகளைக் கொண்ட ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது திருப்பயணமாகவும் அமைந்த இப்பயணம் நிறைவுக்கு வந்தது.

இத்திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு கொட்டுன்னு திருப்பீடத் தூதரகத்தில் இத்திருப்பயணத் தயாரிப்புக் குழுவைச் சந்தித்தார் பாப்பிறை. பின்னர் அங்கிருந்து 9 கிலோ மீட்டரிலிருக்கின்ற அன்னை தெரேசா சபையினர் நடத்தும் ‘அமைதியும் மகிழ்ச்சியும்’ என்ற சிறார் இல்லத்திற்குச் சென்றார். திருத்தந்தையுடன் பெனின் நாட்டுத் தலைநகர் Porto Novo ஆயர் René-Marie Ehuzu உட்பட சிலரும் அவ்வில்லம் சென்றனர். பின்னர் வாத்தியக் கருவி இசைக் குழு முழங்கிக் கொண்டு முன் செல்ல அங்கிருந்து அச்சிறாருடன் புனித ரீட்டா பங்கு ஆலயம் சென்றார் பாப்பிறை. அங்கு மேலும் பல சிறாரும் இருந்தனர். இவர்களை உச்சி முகந்து முத்தமிட்டு புதுநன்மை, செபம், செபமாலை ஆகியவற்றின் சிறப்பை எடுத்துச் சொன்னார் திருத்தந்தை.

செபம் என்பது, தந்தையாம் கடவுளை நோக்கி அன்புடன் குரல் எழுப்புவதாகும். இயேசு உங்களை அன்பு செய்கிறார். உங்களது பெற்றோர் உங்களோடு சேர்ந்து செபம் செய்யச் சொல்லுங்கள். செபம், மன்னிப்பு மற்றும் பிறரன்பு வழியாக அதிகமதிகமாக அன்பு செய்ய இயேசுவின் தாயாம் அன்னைமரியா கற்றுத் தருவாராக. செபம் செய்வதற்குச் செபமாலையை ஒரு கருவி போலப் பயன்படுத்துங்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் செபமாலை கொடுக்கப்படும் என்று சொல்லி சிறாரோடு சேர்ந்து செபித்தார் பாப்பிறை.

மாலை 6.45 மணிக்கு கொட்டுன்னு திருப்பீடத் தூதரகத்தில் பெனின் நாட்டு 10 மறைமாவட்டங்களின் ஆயர்களுக்கு உரை நிகழ்த்தினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டையொட்டித் தான் ஏற்கனவே அறிவித்துள்ள விசுவாச ஆண்டு பற்றிக் குறிப்பிட்டு, இவ்வாண்டு விசுவாசிகள் மனிதரின் மீட்பரில் தங்களின் விசுவாசத்தை ஆழப்படுத்த நிச்சயமாக உதவும். கடந்த 150 ஆண்டுகளாக இம்மண்ணில் கிறிஸ்தவ விசுவாசத்தை அறிவித்தவர்களின் அணுகுமுறை இன்றும் திருச்சபையின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். திருச்சபை, இறைவார்த்தையை தனக்கு மட்டும் என வைத்திருக்க முடியாது. இந்த ஜூபிலி ஆண்டு பெனின் திருச்சபை தனது மறைப்பணி ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உதவதாய் இருக்க வேண்டும். குருக்கள் பற்றாக்குறையைச் சந்திக்கும் மறைமாவட்டங்களுக்குக் குருக்களைக் கொடுத்து உதவ வேண்டும். அதேசமயம் குருக்களை உருவாக்கும் பயிற்சியிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஆயர்கள் தங்கள் மேய்ப்புப்பணி நடவடிக்கையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நான் ஆப்ரிக்காவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டது குறித்து மகிழ்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியும் ஆசீரும்.

இந்தச் சந்திப்புடன் சனிக்கிழமை நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன.

ஒப்புரவு, நீதி, அமைதி என்ற விருதுவாக்குடன் நடைபெற்ற திருத்தந்தையின் பெனின் நாட்டுக்கான இந்தத் திருப்பயணம் ஆப்ரிக்காவில் ஒப்புரவு, நீதி, மற்றும் அமைதியைக் கொண்டு வருவதாக.








All the contents on this site are copyrighted ©.