2011-11-19 14:07:41

நவம்பர் 20, வாழ்ந்தவர் வழியில்... இராபர்ட் கென்னடி


புகழ்பெற்ற அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் கென்னடியின் தம்பி இராபர்ட் கென்னடியும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் புகழ்பெற்றவர். இவர் 1925ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அமெரிக்காவின் மாசசூசட்ஸ் மாநிலத்தில் பிறந்தார்.
இவரது தந்தை அமெரிக்கத் தூதராக இங்கிலாந்தில் பணியாற்றச் சென்றதால், இராபர்ட் தன் 12வது வயதில் இங்கிலாந்தில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலும், வெர்ஜீனியா பல்கலைக் கழகத்திலும் சட்டக்கல்வி பயின்ற இவர், 1950ம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார்.
1951ம் ஆண்டு தன் அண்ணன் ஜான் கென்னடியுடனும், சகோதரி பட்ரிசியாவுடனும் இவர் மேற்கொண்ட ஆசிய சுற்றுப் பயணத்தில் இந்தியா, வியட்நாம், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தார்.
1961ம் ஆண்டு ஜான் கென்னடி அமெரிக்க அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றபோது, Attorney General, அதாவது, சட்டத்துறையின் தலைமைப் பதவிக்கு இராபர்ட் நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இருந்தபோது, இவர் குற்றங்களைத் திட்டமிட்டு நடத்திவந்த 'மாபியா' கும்பல்களை ஒழிக்கப் பெரிதும் பாடுபட்டார். கறுப்பின மக்களின் சம உரிமைகளுக்கும், மரண தண்டனையை ஒழிக்கும் முயற்சிகளுக்கும் இவர் ஆதரவளித்தார்.
1963ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி இவரது அண்ணன் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இராபர்ட் பெருமளவில் பாதிக்கப்பட்டார்.
1968ம் ஆண்டு இராபர்ட் கென்னடி அமெரிக்க அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். பல மாநிலங்களிலும் தனக்கு ஆதரவு தேடி பயணங்கள் மேற்கொண்டார். அதே ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் கொலையுண்டபோது, அமெரிக்க மக்கள் இன வேறுபாடின்றி ஒருங்கிணைய வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் இவர் பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றினார்.
1968ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கலிபோர்னியா மாநிலத்தில் தன் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்து, இரவு ஹோட்டல் திரும்பியபோது, பாலஸ்தீனிய இளைஞன் Sirhan Sirhan என்பவரால் சுடப்பட்டு, அடுத்த நாள் அதிகாலையில் உயிர் துறந்தார்.








All the contents on this site are copyrighted ©.