2011-11-19 15:06:19

ஆப்ரிக்க ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிடுகையில் திருத்தந்தை வழங்கிய உரை


நவ.19,2011. ஆப்ரிக்க ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் எண்ணங்களைத் தொகுத்து, ‘Africae Munus’ என்ற தலைப்பில் நான் அளித்துள்ள அப்போஸ்தலிக்க ஏட்டில் கையோப்பமிட்டதுடன் இந்த மாமன்றத்தின் கொண்டாட்டம் நிறைவுக்கு வருகிறது. ஒப்புரவு, நீதி, அமைதி ஆகிய மையக் கருத்துக்கள் ஆப்ரிக்க மாமன்றத்தில் பேசப்பட்டன, செபிக்கப்பட்டன. இந்த மாமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் புனித பேதுருவின் வழித் தோன்றலுடன் ஆப்ரிக்கத் தலத்திருச்சபைகளுக்கு உள்ள ஒரு சிறப்பு உறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் ஆப்ரிக்க நாட்டு ஆயர்களுக்கு முன்பு வழங்கிய 'Ecclesia in Africa' என்ற அப்போஸ்தலிக்க ஏட்டில், ஆப்ரிக்கக் கண்டத்தில் நற்செய்தி பணி தீவிரமாக வேண்டும் என்று கூறினார். இந்த நற்செய்திப் பணி மனித மேம்பாடு என்பதுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். தற்போது நிகழ்ந்து முடிந்த இந்த மாமன்றத்தில் இதே எண்ணங்களின் தொடர்ச்சி எதிரொலித்தன.
ஒப்புரவு, நீதி, அமைதி ஆகியவை உலகெங்கும் இன்று மிகவும் தேவையான அம்சங்கள் எனினும், ஆப்ரிக்கக் கண்டத்தில் இவைகளின் தேவை இன்னும் அதிகம் உணரப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆப்ரிக்க நாடுகளில் நடைபெற்றுள்ள வன்முறைகள் மற்றும் பதட்ட நிலைகள் இத்தேவைகளை நம் மனங்களில் ஆழமாகப் பதிக்கின்றன.
உலகில் ஒப்புரவை வளர்க்க விளையும் திருச்சபை முதலில் தனக்குள் அந்த ஒப்புரவு உள்ளதா என்று ஆய்வு செய்வது அவசியம். “இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்” (5:18) என்று புனித பவுல் அடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் சொல்லியிருப்பதுபோல், ஒப்புரவு அடைந்துள்ள திருச்சபை ஆப்ரிக்க கண்டத்திற்கும், இந்த உலகிற்கும் ஒப்புரவின் உன்னத அடையாளமாகத் திகழ முடியும்.








All the contents on this site are copyrighted ©.