2011-11-18 15:46:14

வாழ்ந்தவர் வழியில்.........இந்திரா காந்தி


இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா காந்தி 1917ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார்.
1966ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி பிரதமராகப் பதவியேற்ற இவர், 1977 மார்ச் 24ம் தேதி வரை பதவியில் இருந்தார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளர் மற்றும் சிந்தனையாளர்.
மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவாக உதவினார்.
1975ம் ஆண்டில் அவசரகால நிலையை அறிவித்தார் இந்திரா காந்தி. 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கைப் பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த கூட்டணிக் கட்சி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர்.
இக்காலக்கட்டத்தில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வரத்தொடங்கியது.
படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார் இந்திரா காந்தி. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார் இந்திரா காந்தி. தொடர்ந்து இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள், இந்திரா மீது சீக்கியர்களின் கோபத்தை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, 1984ம் ஆண்டு அக்டோபர் 31ல், சீக்கியர்களான அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்குப் பின் இவர் மகன் இராஜீவ் காந்தி பிரதமரானார்.








All the contents on this site are copyrighted ©.