2011-11-18 15:41:40

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பெனின் நாட்டில் வழங்கிய முதல் உரை


நவ.18,2011. மூன்று காரணங்கள் என்னை இந்த நாட்டிற்கு அழைத்து வந்துள்ளன. பெனின் நாட்டில் கிறிஸ்தவ மறைப்பணி துவங்கி 150 ஆண்டுகளும், திருப்பீடத்துடன் இந்நாட்டின் அரசியல் உறவுகள் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகளும் நிறைவடைந்துள்ள இந்நிலையில், பெனின் அரசுத் தலைவரும், இந்நாட்டு ஆயர் பேரவையும் எனக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்று இங்கு நான் வந்துள்ளேன். இது முதல் காரணம்.
2009ம் ஆண்டு உரோமையில் நடைபெற்ற ஆப்ரிக்க ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் நிறைவாக, ஆப்ரிக்க ஆயர்களுக்கு நான் கூற விழையும் சிறப்பு அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை அவர்களுக்கு அளிக்க நான் வந்துள்ளேன். இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம் மிகவும் தனிப்பட்ட, என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. அதாவது, அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுடன் நான் வத்திக்கானில் பணி புரிந்தபோது, என்னுடன் பல ஆண்டுகள் பணிபுரிந்த கர்தினால் Bernardin Gantin அவர்கள் பிறந்த நாடு இது என்பதால், அவரது கல்லறையைத் தரிசிக்க இங்கு வந்துள்ளேன். கர்தினால் Gatin உடன் பல சமயங்களில் உரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். அவருடன் இணைந்து செபித்துள்ளேன். இம்மூன்று காரணங்களும் என்னை இந்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளன.
பெனின் நாடு பழமையான, மிக உயர்ந்த பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள நாடு. தற்போது இந்நாடு பல புதிய வழிகளில் முன்னேறி வருகிறது. வர்த்தக உலகம் கட்டாயமாக மக்கள் மீது திணிக்கும் விழுமியங்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையாமல், பழமையையும், புதுமையையும் சரிவர இணைக்கும்போதுதான் ஒரு நாடு உறுதியான முன்னேற்றம் அடைய முடியும்.
இந்நாட்டின் முன்னேற்றத்திற்குத் திருச்சபை தனிப்பட்ட வழிகளில் உதவிகள் செய்துள்ளது. சிறப்பாக, நலவாழ்வு, கல்வி ஆகியத் துறைகளிலும், கருணையைப் பறைசாற்றும் பிறரன்புச் சேவையிலும் திருச்சபை பெனின் நாட்டிற்கு ஆற்றியுள்ள பணிகளை மறந்துவிட முடியாது. திருச்சபையும், பெனின் நாட்டு அரசும் இதுவரை பயணித்துள்ள நட்புறவின் அடிப்படையில் நான் இந்தப் பயணத்தை நம்பிக்கையுடன் துவக்குகிறேன்.








All the contents on this site are copyrighted ©.