2011-11-17 15:12:53

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடிவந்த அருள்சகோதரி கொல்லப்பட்டுள்ளார்


நவ.17,2011. ஏழைகளின் பேரில் அதிக அன்புகொண்ட அருள்சகோதரி Valsa John அவர்களுக்காகப் போராடி தன் உயிரை வழங்கியுள்ளார் என்று சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி கூறினார்.
அருள் சகோதரி Valsa Johnன் வாழ்வும் மரணமும், நம்மை மீண்டும் நம் விசுவாச வாழ்வில் வேரூன்றி நிற்கவும், ஏழைகளுக்கு பணிகள் செய்வதில் துணிவையும் தந்துள்ளன என்று லத்தீன் ரீதி பேராயர் Maria Calist Soosapakiam கூறினார்.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடிவந்த அருள்சகோதரி Valsa John இச்செவ்வாய் இரவு கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று தும்கா மறைமாவட்ட ஆயர் ஜூலியஸ் மாராண்டி கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் Pakur மாநிலத்தில் Pachuara என்ற கிராமத்தில் வாழும் பழங்குடியினர் அங்கு ஆரம்பமாகவிருக்கும் நிலக்கரி சுரங்கப் பணிகளால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழக்கும் நிலையில் இருந்தனர். இவர்கள் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்களை மேற்கொண்டு பணியாற்றியவர் அருள் சகோதரி Valsa John. இந்தப் போராட்டங்களின் காரணமாக இவர் 2007ம் ஆண்டு சிறைப்படுத்தப்பட்டார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தக் கொலை குறித்து அரசு தீர விசாரிக்க வேண்டும் என்றும் குற்றம் புரிந்தவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் ஆலஞ்சேரி கூறினார்.
பேராயர் ஆலஞ்சேரி மற்றும் ஆயர் போஸ்கோ புத்தூர் இருவரும் அருள்சகோதரி Valsa John குடும்பத்தினரை கேரளாவின் வழகளா என்ற இடத்தில் சந்தித்து அவர்களுக்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
அருள்சகோதரி Valsa Johnன் அடக்கச் சடங்கு இவ்வியாழன் நடைபெற்றதாக UCAN செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.