2011-11-16 15:36:10

லோக்பால் மசோதாவை சீரமைக்க இந்தியாவின் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆலோசனைகள்


நவ.16,2011. இந்தியாவில் நிலவிவரும் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாவிடினும், இந்தச் சமுதாயத் தீமையை எதிர்க்கும் சட்டங்கள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர்.
தற்போது இந்தியாவில் பல்வேறு விவாதங்களை உருவாக்கிவரும் லோக்பால் மசோதாவை இன்னும் வலுவுள்ளதாக மாற்ற இந்தியாவின் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை, இளைய கிறிஸ்தவப் பெண்கள் சங்கம், ஆகியவை இணைந்து வழங்கியுள்ள இந்த அறிக்கையில், அன்னா ஹசாரே உருவாக்கிய லோக்பால் மசோதாவும், மத்திய அரசு உருவாக்கியுள்ள மசோதாவும் நல்ல முறையில் அமையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் இந்தச் சட்டத்தின் கீழ் புலன்விசாரனைக்கு உள்ளாக வேண்டும் என்றாலும், அவர்கள் குற்றம் தீர்மானம் ஆகும்வரை அவர்கள் பாராளுமன்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
அதேபோல், பிரதமரும் இந்தச் சட்டத்தின் அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறும் இவ்வறிக்கை, பிரதமருக்கு ஒரு சில விதி விலக்குகளும் வழங்கப்பட வேண்டும், இல்லையேல் சிறு சிறு காரணங்களுக்காக குடியரசை நிலை குலையச் செய்யும் வழிமுறைகள் பரவி விடும் என்று இவ்வறிக்க எச்சரிக்கின்றது.
மத்திய அரசளவில் உள்ள இந்த அதிகாரம் ஒவ்வொரு மாநில அளவிலும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கை ஆலோசனை தந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.