2011-11-16 15:35:26

பெனின் நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து திருப்பீடப் பேச்சாளர்


நவ.16,2011. வருகிற வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு முடிய திருத்தந்தை ஆப்ரிக்காவின் பெனின் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருப்பயணம் ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம் என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
திருத்தந்தை இவ்வார இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் பெனின் திருப்பயணம் குறித்து இத்திங்களன்று பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi, ஆப்ரிக்கக் கண்டத்திற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இரண்டாவது திருப்பயணம் இது என்பதைச் சுட்டி காட்டினார்.
ஈராண்டுகளுக்கு முன் வத்திக்கானில் நடைபெற்ற ஆப்ரிக்க நாட்டு ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் நிறைவாக, மாமன்ற ஆயர்களுக்கு திருத்தந்தை தயாரித்துள்ள அறிவுரைகள் அடங்கிய ஒரு மடலில் இந்தத் திருப்பயணத்தின்போது திருத்தந்தை தன் கையொப்பமிட்டு, அதனை ஆப்ரிக்க ஆயர்களுக்கு வழங்குவார் என்றும், இந்தக் கையொப்பமிடும் நிகழ்வில் 35 ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்கள் கலந்துகொள்வர் என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
பெனின் மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய காலம்சென்ற கர்தினால் Bernardin Gantin அவர்களின் கல்லறையைச் சந்திப்பதும் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வு என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
பெனின் நாட்டில் 90 இலட்சத்திற்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகின்றனர் என்றாலும், 150 ஆண்டுகளுக்கு முன், மற்ற நாடுகளுக்கு நற்செய்தி பரப்பும் பணி இந்த நாட்டிலிருந்து ஆரம்பமானது என்பதை லொம்பார்தி தன் உரையில் வலியுறுத்தினார்.
தற்போது 88 இலட்சம் மக்களைக் கொண்ட பெனின் நாட்டில், 30 இலட்சம் பேர் கத்தோலிக்கர். 11 ஆயர்கள், 811 குருக்கள், 1386 துறவியர் மற்றும் 11251 மறைகல்வி ஆசிரியர்களைக் கொண்ட இந்நாட்டில், தற்போது 800க்கும் அதிகமானோர் குருத்துவ பணிக்கென பயிற்சிகள் பெற்று வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.