2011-11-16 15:35:39

தூத்துக்குடி ஆயர் - அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முழுவதுமே மக்கள் மேற்கொண்ட ஒரு போராட்டம்


நவ.16,2011. தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு உதவிகள் செய்வதாகவும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் மீதும், நான்கு பங்கு குருக்கள் மீதும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அணுமின் நிலையப் பணிகளுக்கு இடையூறாக, சட்டத்திற்குப் புறம்பான கூட்டங்களை நடத்துவதாக தன்மீதும், குருக்கள்மீதும், பிற மனித உரிமை ஆர்வலர்கள்மீதும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று ஆயர் யுவான் அம்புரோஸ் செய்தியாளர்களிடம் இச்செவ்வாயன்று கூறினார்.
போராட்டம் நடத்தி வரும் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி இது என்று கூறிய ஆயர் அம்புரோஸ், இந்தக் குற்றச்சாட்டினால் மனம் தளராமல், போராட்டம் தொடரும் என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வணுமின் நிலையம் கூடங்குளத்தில் அமைவதற்கு ஆரம்ப நாட்கள் முதலே எதிர்ப்புக்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் அம்புரோஸ், ஜப்பான் Fukushimaவில் நிகழ்ந்த விபத்தை அடுத்து, இந்தப் பிரச்சனையை மக்கள் அனைவரும் நன்கு புரிந்துகொண்டுள்ளதால், இந்த எதிர்ப்பு வலுவடைந்துள்ளது என்று கூறினார்.
இந்தப் போராட்டம் முழுவதுமே மக்கள் தாங்களாகவே மேற்கொண்ட ஒரு போராட்டம் என்றும், தலத்திருச்சபை இதற்குத் தலைமைத் தாங்கவில்லை என்றும் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் விளக்கினார்.
செப்டம்பர் 11 முதல் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் இதுவரை 8000க்கும் அதிகமானோர் பல்வேறு வகைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்று பொதுநிலையினர் தலைவர்களில் ஒருவரான சேவியர் பெர்னாண்டோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.