2011-11-15 14:31:52

பேராயர் தொமாசி : சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது


நவ.15,2011. கொத்து வெடிகுண்டுகள் அப்பாவி மக்களுக்கும் அவர்களின் அடிப்படையான பொருளாதார வாழ்வுக்கும் விளைவிக்கும் பெரும் சேதங்களைக் கவனத்தில் கொண்டு இந்தக் குண்டுகளின் பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
“சிறிய ஆயுதப் பயன்பாட்டுத் தடை” குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தை நான்காவது தடவையாகப் பரிசீலனை செய்யும் ஐ.நா. கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, கொத்துவெடி குண்டுகளால் பாதிக்கப்படுவோருக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறும் வலியுறுத்தினார்.
நிலையற்ற சர்வதேசச் சூழலிலும் நிச்சயமற்ற உலகிலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமே மக்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது என்றுரைத்த பேராயர் தொமாசி, இந்தச் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அப்பாவி குடிமக்கள் மீது தாறுமாறாக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகச் செயல்படும் உரிமை CCW என்ற சிறிய ஆயுதப் பயன்பாட்டைத் தடை செய்வது குறித்த உடன்பாட்டிற்கு இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
கொத்துவெடி குண்டு என்பது பலநூறு சிறிய வெடிகலங்களை வெளியே தள்ளும் ஒரு குண்டு. இந்த வெடிகலங்கள் பரந்த பரப்பளவில் விழுந்து வெடித்து அழிவு உண்டு பண்ணும். வானிலில் இருந்தோ தரையில் இருந்தோ கொத்துக் குண்டுகள் வீசப்படும். வீசப்பட்ட பல காலம் பின்பும் வெடிக்காத வெடிகலங்கள் வெடித்து பெரும் அழிவு ஏற்படுத்த வல்லவை. இதனால் இந்தக் குண்டை போரில் பயன்படுத்துவதில்லை என 94 நாடுகள் 2008ம் ஆண்டு மே மாதம் Convention on Cluster Munitions என்ற பன்னாட்டு உடன்படிக்கை செய்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.