2011-11-14 15:39:06

மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிவர புரிந்து கொள்ளாமல் வாழ்வதே நம் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்குகின்றது - கர்தினால் Jean-Louis Tauran


நவ.14,2011. மதங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் நம்மிடையே சச்சரவுகளை வளர்ப்பதில்லை, மாறாக, இவ்வேறுபாடுகளை நாம் சரிவர புரிந்து கொள்ளாமல் வாழ்வதே நம் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்குகின்றது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் பயணங்களை மேற்கொண்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, இஞ்ஞாயிறு மாலை புது டில்லியில் நடந்த ஒரு பல்சமய கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
“உண்மை ஒன்றே, அதை ஞானிகள் பல வகையில் காண்கின்றனர்” என்று இந்திய வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Tauran, இந்த வேறுபாடுகள் நம் தினசரி வாழ்வை அழகுறச் செய்கின்றன என்றும், இந்த வேறுபாடுகள் முழு உண்மையைக் காண நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
காந்தி தன் வாழ்வில் கடைபிடித்த அகிம்சை என்பது வெறும் வன்முறையற்ற ஒரு வழி அல்ல என்று கூறிய கர்தினால் Tauran, அந்த அகிம்சை வழி இன்னும் உயர்ந்த, பொருள் நிறைந்த வாழ்வை காட்டும் வழி என்று எடுத்துரைத்தார்.
25 ஆண்டுகளுக்கு முன் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அசிசியில் உலக அமைதிக்கென துவக்கி வைத்த பல் சமய முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாகவே இன்றைய முயற்சியும் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாம் அனைவருமே ஒரு பொதுவான முடிவை நோக்கிச் செல்லும் பயணிகள் என்பதால், அமைதியை கட்டியெழுப்பும் கருவிகளாக நாம் மாற வேண்டும் என்று புது டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
இந்தியாவின் திருப்பீடத் தூதர், பேராயர் Salvatore Pennacchio, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias, சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் George Alencherry ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், இந்து, சீக்கியம், புத்தம், சமணம் ஆகிய பல மதங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.