2011-11-14 15:43:52

போதைப் பொருட்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த பிலிப்பின்ஸ் ஆயர் மரணம்


நவ.14,2011. பிலிப்பின்ஸ் நாட்டின் வடபகுதிகளில் பரவி இருந்த சட்ட விரோதமான போதைப் பொருட்கள், மற்றும் அதிகாரப்பூர்வமற்ற மருந்துகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த பிலிப்பின்ஸ் ஆயர் ஒருவர் இஞ்ஞாயிறு திருப்பலிக்குப் பின், சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
இறை வார்த்தைச் சபையைச் சேர்ந்த 69 வயதான ஆயர் Artemio Rillera தூய இதய குருமடத்தில் இஞ்ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றிய பின், ஆஸ்த்மா தாக்குதலால், மூச்சுத் திணறினார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் இறந்தார்.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் ஓர் உறுப்பினராக 18 ஆண்டுகள் பணி புரிந்த ஆயர் Rilleraவின் மரணம் ஒரு பெரும் அதிர்ச்சி என்று ஆயர் பேரவையின் சார்பில் பேசிய குருமுதல்வர் Pedro Quitorio கூறினார்.
1993ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட Rillera போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளார் என்றும், இவரது பல சமுதாயப் பணிகளை கௌரவிக்கும் விதமாக, 2009ம் ஆண்டு இவருக்கு Saranay என்ற மிக உயர்ந்த ஒரு விருது வழங்கப்பட்டது என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.