2011-11-14 15:41:12

பாகிஸ்தானிலேயே மிகப்பெரும் கத்தோலிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டது


நவ.14,2011. பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரும் கத்தோலிக்க ஆலயம் ஒன்றை அந்நாட்டின் திருப்பீடத்தூதர் பேராயர் Edgar Penna அண்மையில் திறந்து வைத்து அர்ச்சித்தார்.
இத்திறப்பு விழாவுக்கென குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் கத்தோலிக்கர்கள், திருப்பீடத் தூதரையும், கராச்சி உயர்மறை மாவட்டப் பேராயர் எவரிஸ்ட் பின்டோவையும் மலர் தூவி வரவழைத்தனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த ஆலய அர்ச்சிப்பின்போது, திருத்தந்தை அம்மக்களுக்கு வழங்கிய ஆசீர் அடங்கிய செய்தியை திருப்பீடத்தூதர் மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
நம்மிடையே வளர்ந்து வரும் விசுவாசத்தின் ஓர் அடையாளமே இந்த மாபெரும் ஆலயம் என்று கராச்சி பேராயர் பின்டோ கூறினார்.
கராச்சியில் இதுவரை 2000 பேர் அமரும் வண்ணம் அமைந்திருந்த புனித பேட்ரிக் பேராலயமே பெரிய கோவில் என்று கருதப்பட்டது. தற்போது அர்ச்சிக்கப்பட்டுள்ள புனித பேதுரு ஆலயம் 5000 பேர் அமரும் வசதி கொண்டதாய் 1858 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.